சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோர் மீது ஜூலை 23-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீலகிரி தொகுதி திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி கடந்த 2015-ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பார்க் லிமிடெட் ஆகியோருக்கு எதிராக கடந்த 2023-ம் ஆண்டு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் ஆ.ராசா வருமானத்தைவிட 579 சதவீதம் அதிகமாக, அதாவது ரூ.5 கோடியே 53 லட்சத்துக்கு சொத்துகளை குவித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.
இந்த வழக்கு தற்போது சென்னை எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆ.ராசா தரப்பில், வருமான வரி கணக்கு விவரங்களை சரிபார்க்க வேண்டியுள்ளதால் இந்த வழக்கின் சில ஆவணங்களை வழங்க வேண்டும் எனக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கு சிபிஐ தரப்பில், ‘ஆ.ராசா தாக்கல் செய்துள்ள வருமான வரி விவரங்கள் அவரிடமே உள்ளபோது வழக்கு ஆவணங்களை எதற்காக கோர வேண்டும். சாட்சி விசாரணையின்போது அவர் அந்த ஆவணங்களைப் பெற்று சரிபார்க்கலாம். எனவே, வழக்கு ஆவணங்களை வழங்கக்கூடாது’ என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.வெங்கடவரதன், வருமான வரி கணக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டுமென ஆ.ராசா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தார்.
பின்னர் ஆ.ராசாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், ஜூலை 23-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்த நீதிபதி, அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 23-க்கு தள்ளி வைத்துள்ளார்.