மதுரை: ‘‘அதிமுகவினர் விவாதம் செய்வதற்கு நேரில் வராமல் பயந்து ஓடிவிட்டார்கள். சொத்துவரி விவகாரத்தில் மேயருக்கு ஆதரவாக நிற்போம்” என்று மேயர் இந்திராணிக்கு ஆதரவாக திமுக கவுன்சிலர்கள் மட்டுமில்லாது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக கவுன்சிலர்களும் பேசினர்.
சொத்துவரி முறைகேட்டில் மேயர் இந்திராணி கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மேயராக இந்திராணி தொடரும் வரை மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று அதிமுக புறக்கணித்த நிலையில் மாநகராட்சிகூட்டம் இன்று நடந்தது.
இக்கூட்டத்தில் மேயருக்கு எதிரான திமுக கவுன்சிலர்களும், மண்டலத் தலைவர்களும் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்பட்ட நிலையில் மாநகராட்சி கூட்டம் திட்டமிட்டப்படி நடக்குமா? நடக்காதா? என்ற பரப்பு, கூட்டம் தொடங்கும் வரை காணப்பட்டது.
அதுபோல், மேயர் இந்திராணி, மாமன்ற கூட்டரங்கிற்கு வருவதற்கு சில நிமிடங்கள் முன் வரை 15-க்கும் குறைவான கவுன்சிலர்களே வந்திருந்தனர். மேயர் இந்திராணி வந்து அவரது இருக்கையில் அமர்ந்ததும், மற்ற திமுக கவுன்சிலர்களும், அவர்கள் கூட்டணி கட்சி கவுன்சிலர்களும் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். அதனால், பெரும்பான்மை கவுன்சிலர்கள் ஆதரவுடன் கூட்டம் தொடங்கியது. ஆணையாளர் சித்ரா, துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.
திமுக கவுன்சிலர் ஜெயராஜ்: அதிமுக கவுன்சிலர்கள், கூட்டத்தை புறக்கணித்து மிகப்பெரிய தவறு செய்துள்ளனர். சொத்துவரி முறைகேட்டில் சில தவறுகள் நடந்து இருக்கலாம். எந்த ஒரு கருத்தும், ஆட்சேபனை இருந்தாலும் நேரில் கூட்டத்திற்கு வந்து விவாதத்தில் பங்கேற்று இருக்க வேண்டும். 2022 முதல் மட்டுமே சொத்துவரி முறைகேட்டை விசாரிக்க வேண்டும் என்று அதிமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
2011-ம் ஆண்டு முதல் சொத்துவரி முறைகேட்டை விசாரிக்க வேண்டும் என்றால் அதிமுகவினர் பதறுகின்றனர். ஏனென்றால் அதிமுகவினர் ஏராளமானோர் இந்த வழக்கில் சிக்குவார்கள். யார் தவறு செய்திருந்தாலும் எங்கள் முதல்வர் நடவடிக்கை எடுப்பார். அதன் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு மடியில் கணமில்லை, அதனால் பயமில்லாமல் கூட்டத்திற்கு வந்திருக்கிறோம். ஆனால், அதிமுகவினர் பயந்தே இன்று கூட்டத்திற்கு வராமல் ஓடிவிட்டார்கள்.
காங்கிரஸ் கவுன்சிலர் கார்த்திகேயன்: எதுவாக இருந்தாலும் அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வந்திருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் காங்கிரஸ் கவுன்சிலர்கள், மேயருடன் நிற்போம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் குமரவேல்: அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணிக்கவில்லை. கூட்டத்திற்கு வராமல் ஓடிவிட்டார்கள். சொத்துவரி முறைகேட்டை 2011-ம் ஆண்டு முதலே விசாரிக்க வேண்டும். அப்போதுதான் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.
காங்கிரஸ் கவுன்சிலர் சுவேதா: மாமன்ற கூட்டத்தில் எங்களுக்கெல்லாம் பேச வாய்ப்பு கிடைப்பதில்லை. மண்டலத் தலைவர்கள் இல்லாததால் மண்டல கூட்டம் நடக்கவில்லை. அதனால், எங்கள் வார்டு பிரச்சினைகளை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியவில்லை.
திமுக கவுன்சிலர் சோலை செந்தில்குமார்: 2 அதிமுக கவுன்சிலர்கள் இன்று கைதாக வாய்ப்பு இருந்தது. அதற்கு பயந்தே அவர்கள் கூட்டத்திற்கு வரவில்லை. 2011-ம் ஆண்டு முதல் சொத்துவரி முறைகேட்டை விசாரிக்க, நாமமும் ஆணையாளர் மூலம் போலீஸாரிடம் பரிந்துரை செய்ய வேண்டும்.
ஆணையாளர் சித்ரா கூறுகையில், “2011 மட்டுமில்லாது, 2000-ம் ஆண்டில் தவறு நடந்திருந்தாலும் கூட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குடியிருப்பு கட்டிடங்களை தவிர்த்துவிட்டு வணிக கட்டிடங்களில் சொத்துவரி குறைக்கப்பட்டிருந்தால் திருத்தி மறுசீரமைக்கப்படுகிறது.” என்றார்.