மதுரை: ”நம் எண்ணமே நம் மகிழ்ச்சிக்கும், துன்பத்திற்கும் அடிப்படை காரணமாக திகழ்கிறது” என்று மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சுதந்திர தின விழாவில் கூறியுள்ளார்.
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் 79வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில், மேயர் இந்திராணி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவுக்கு ஆணையாளர் சித்ரா, துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடம் பெற்ற மாநகராட்சி பள்ளிகள், கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தந்த 6 பள்ளி தலைமை ஆசிரியர்கள், சுகாதாரப் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், இளநிலை உதவியாளர்கள், பரப்புரையாளர்கள், நகர சுகாதார செவிலியர்கள், மருந்தாளுனார்கள் மற்றும் துய்மை பணியாளர்களுக்கு மேயர் இந்திராணி, ஆணையாளர் சித்ரா ஆகியோர் விருதும், பாராட்டு சான்றிதழும் வழங்கி கவுரவித்தனர்.
பின்னர் விழாவில் பேசிய மேயர் இந்திராணி கூறியதாவது: நாட்டின் விடுதலைக்காக தங்களின் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் தியாகம் செய்த நம் முன்னோர்களின் தியாகத்தை நாம் இத்தருணத்தில் நினைவு கூற வேண்டும். இன்று நாடு முழுவதும் மாநிலத்தின் முதல்வர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றுகிறார்கள் என்றால் அது மறைந்த முதல்வர் கருணாநிதி பெற்றுத் தந்த உரிமையாகும்.
பெற்ற சுதந்திரத்தையும் உரிமைகளையும் நாம் பேணிக் காத்திடுவோம். நம் எண்ணமே நம் மகிழ்ச்சிக்கும், துன்பத்திற்கும் அடிப்படையாக காரணமாக திகழ்கிறது. மனித நேயத்துடன் சத்தியத்தின் மீதும் அகிம்சையின் மீதும் பற்று கொள்வோம்” என்றார்.
தனது கணவர் பொன் வசந்த் உள்பட மாநகராட்சி சம்பந்தப்பட்ட 17 பேரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில் மேயர் இந்திராணி, நம் எண்ணமே நம் மகிழ்ச்சிக்கும், துன்பத்திற்கும் அடிப்படையாக காரணம் என்று பேசியிருப்பது, சொத்து வரி முறைகேடு பற்றிய தன்னுடைய உள்ள குமுறுலை தான் கூறியிருப்பதாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில், துணை ஆணையாளர் ஜெய்னுலாபுதீன். நகர் நல அலுவலர் இந்திரா, நகரமைப்பு அலுவலர் மாலதி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், கணக்கு குழு தலைவர் நூர் ஜகான், கல்விக் குழு தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பெரும்பான்மை கவுன்சிலர்கள் புறக்கணிப்பு: சொத்து வரி முறைகேடு வழக்கில் ராஜினாமா செய்த 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக் குழு தலைவர்கள் உள்பட மொத்த கவுன்சிலர்கள் 100 பேரில் 90 பேர் மாநகராட்சி சுதந்திர தின விழாவில் பங்கேற்க வராமல் புறக்கணித்தனர். சொத்து வரி முறைகேட்டில் கணவர் சிறைக்கு சென்ற நிலையில் மேயர் பதவியை இந்திராணியிடம் இருந்து கட்சித் தலைமை பறிக்கும் என திமுக கவுன்சிலர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், தற்போது வரை அவர் மேயர் பதவியில் தொடருவதால் பதவியை இழந்த மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், மற்ற கவுன்சிலர்கள், ”தங்களுக்கு ஒரு நியாயம், மேயருக்கு ஒரு நியாயமா?” என்று மாநகர மாவட்டச் செயலாளர், உள்ளூர் அமைச்சர்கள் மீது அதிருப்தியில் உள்ளனர்.