சென்னை: பாமகவின் சேலம், தருமபுரி மாவட்ட கூட்டங்களை அன்புமணி இன்று நடத்தவுள்ள நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, இரா.அருள் ஆகியோர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் இருவரிடமும் சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இருவருக்கும் இடையே இன்னும் சமரசம் ஏற்படவில்லை. இதற்கிடையில், அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் கட்சி நிர்வாகிகளை, கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அதேநேரம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு அதே பொறுப்பில் நியமனம் செய்து அன்புமணி கடிதம் வழங்கி வருகிறார்.
இந்நிலையில், பாமகவின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டங்களை கடந்த 15-ம் தேதி முதல் அன்புமணி நடத்தி வருகிறார். சேலம் மாவட்ட கூட்டம் ஜூன் 19-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கும், தருமபுரி மாவட்ட கூட்டம் பிற்பகல் 3 மணிக்கும் நடக்கிறது.
இதற்கிடையில், சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ இரா.அருள் நெஞ்சுவலி உள்ளிட்ட உடல்நலக் குறைவால் சென்னையில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையிலும், பென்னாகரம் தொகுதி எம்எல்ஏவும் பாமக கவுரவத் தலைவருமான ஜி.கே.மணி நெஞ்சுவலி உள்ளிட்ட உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையிலும் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவரின் உடல்நிலையையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். சேலம் மற்றும் தருமபுரி மாவட்ட கூட்டங்களை அன்புமணி இன்று நடத்தவுள்ள நிலையில், நேற்று கட்சியின் 2 எம்எல்ஏக்களும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.