சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில், ரூ.5.25 கோடியில் செவிலியர் பயிற்சி மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டும் பணிக்கு, மேயர் ஆர்.பிரியா நேற்று அடிக்கல் நாட்டினார்.
சென்னை மாநகராட்சி சார்பில், தண்டையார்பேட்டை மண்டலம், 43-வது வார்டு, தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் ரூ.5.25 கோடியில், மருத்துவ இணையியல் படிப்பு பயிலும் உதவி செவிலியர் பயிற்சி மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டுமானப் பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், மேயர் ஆர்.பிரியா பங்கேற்று திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்தக் கட்டிடம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் 1,560 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது. இதில், தரைத் தளத்தில் முதல்வர் அறை, காப்பாளர் அலுவலகம், காப்பாளர் அறை, பெற்றோர் காத்திருப்பு அறை, சமையலறை, உணவுக் கூடம், கழிப்பறை உள்ளிட்ட 14 அறைகளும் கட்டப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி.சேகர், ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ ஜே.ஜே.எபினேசர், வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, நிலைக் குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, மண்டலக் குழுத் தலைவர் நேதாஜி யு. கணேசன், கவுன்சிலர்கள் மோ.ரேணுகா, ந.பவித்ரா மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.