சென்னை: தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்று 25 செவிலியர்களுக்கு சிறந்த செவிலியர் விருது வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக அரசு என்றைக்கும் செவிலியர்களுக்கு பக்க பலமாக நிற்கும் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் நூற்றாண்டு தொடக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில் 25 செவிலியர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான சிறந்த செவிலியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து நூற்றாண்டு தொடக்க விழா இலச்சினை மற்றும் காலண்டர் தொகுப்பினை வெளியிட்டார்.
இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வுக் குழும திட்ட இயக்குநர் அருண் தம்புராஜ், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் தலைவர் ஜெ.ராஜமூர்த்தி, பதிவாளர் எஸ்.அனி கிரேஸ் கலைமதி, துணை தலைவர் அனி ராஜா, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொ) தேரணிராஜன், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, நா.எழிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் உதயநிதி பேசியதாவது: உலகில் பிறக்கக்கூடிய ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய சொந்த தாயின் முகத்தை பார்ப்பதற்கு முன்பாக செவிலியர்கள் முகத்தைதான் பார்க்கின்றனர். இந்த செவிலியர் கவுன்சில்தான் இந்தியாவில் மட்டுமல்ல தென்கிழக்கு ஆசியாவிலேயே செவிலியர்களுக்காக உருவாக்கப்பட்ட முதல் கவுன்சில் என்ற பெருமைக்குரியது.
உலகிலேயே மூன்றாவதாக நூற்றாண்டு காணுகின்ற செவிலியர் கவுன்சில் என்ற பெருமை நம்முடைய கவுன்சிலுக்குத்தான் உண்டு. எனவே, இந்த கவுன்சில் என்பது தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே மிகப்பெரிய பெருமையாக திகழ்கிறது.
பிரசவத்தின்போது தாய், சேய் இறப்பு விகிதத்தை பெருமளவு குறைத்து, இன்றைக்கு இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இந்த வெற்றிக்கு காரணம் மனித உயிர்களை சமமாக கருதும் மருத்துவர்களும், செவிலியர்களும்தான். இந்த கவுன்சிலில் மொத்தம் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பதிவு செய்துள்ளனர்.
இவ்வளவு எண்ணிக்கை தமிழகத்தில் வளர்ந்திருப்பதற்கு திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களும், உருவாக்கப்பட்ட சுகாதார கட்டமைப்புகளும்தான் காரணம். திமுக அரசு என்றைக்கும் செவிலியர்களுக்கு பக்க பலமாக நிற்கும். இன்றைக்கு நூற்றாண்டு காண்கின்ற இந்த செவிலியர் கவுன்சில் மேலும் பல ஆண்டுகள் செயல்பட்டு, மக்கள் பணியாற்றிட வேண்டும், தமிழகத்தின் சுகாதாரத்தை பேணி பாதுகாத்திட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.