சென்னை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பாகுபாடு காட்டிய அறநிலையத் துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள வல்லக்கோட்டை முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் எம்எல்ஏ என்ற முறையில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்றார். அப்போது குடமுழுக்கு நடத்தப்பட்ட தளத்துக்கு செல்ல செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
இதற்கு ஆகம விதிகளை அறநிலையத் துறை அதிகாரிகள் காரணமாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம் செல்வப்பெருந்தகைக்கு முன்பு சென்ற, தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை அறநிலையத் துறை அதிகாரிகள் வரவேற்று, உபசரித்து குடமுழுக்கு விமான தளத்தில் இருக்கை போட்டு அமர வைத்துள்ளனர். குடமுழுக்கு நேரத்தில் கொடியசைக்கும் நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினர் முன்நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், செல்வப்பெருந்தகைக்கு அநீதி இழைத்து சமூக பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. அவரை கண்டு கொள்ளாமல் அறநிலையத் துறை அதிகாரிகள் அலட்சியப்படுத்தியுள்ளனர். ஆண்டவர் முன்பு அனைவரும் சமம் என்ற நிலைக்கு மாறாக, அப்பட்டமான பாகுபாடு காட்டிய அறநிலையத் துறை அதிகாரிகளின் செயல் கண்டிக்கத்தக்கது. சமூக நீதிக்கு எதிரான இச்செயலுக்கு காரணமானவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.