சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், செல்லப் பிராணிகள் மற்றும் தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் பணிகளை மேலாண்மை செய்ய ஸ்மார்ட் போன் செயலியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும், வெறிநாய்க்கடி நோய் பரவுவதை தடுக்கவும், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் மற்றும் சோழிங்க நல்லூர் ஆகிய 5 இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கூறிய 5 இடங்கள் மற்றும் நுங்கம்பாக்கத்தில் செல்லப் பிராணிகள் சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.
தெருநாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மேலும் 10 மண்டலங்களில் நாளொன்றுக்கு தலா 30 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மற்றும் ரேபிஸ் தடுப்பூசிகள் செலுத்தும் வகையில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சென்னையில் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 1.80 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
தெரு நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகள் என 2 லட்சம் நாய்களுக்கும் அதன் விவரங்கள் ஆன்லைன் போர்டலில் பதிவு செய்து மைக்ரோசிப் பொருத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், நாய்களை பிடித்தல், தடுப்பூசி செலுத்துதல், கண்காணித்தல் போன்ற பணிகளை மேலாண்மை செய்ய தனி ஸ்மார்ட் போன் செயலியையும் மாநகராட்சி உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தெருநாய்கள் பிடிக்கப்படும் இடங்கள், கருத்தடை செய்த நாள் விவரம், அகப்புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தப்பட்ட விவரம், இதர சிகிச்சை விவரங்களும், செல்லப் பிராணிகளின் உரிமையாளர் விவரம், உரிமம் விவரம், ரேபிஸ் தடுப்பூசி, சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர் விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்து அதன் விவரங்கள் அடங்கிய மைக்ரோசிப் நாய்களின் உடலில் பொருத்தப்படும்.
இந்த விவரங்களை மேலாண்மை செய்ய ஸ்மார்ட் போன் செயலியும் உருவாக்கப்படும். மைக்ரோ சிப் பொருத்துதல் மற்றும் செயலியை உருவாக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும். இந்த செயலிகள் வழியாக செல்லப் பிராணிகளுக்கு எப்போது ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும் என்ற அலர்ட், உரிமையாளரின் ஸ்மார்ட் போனில் தெரிவிக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.