சென்னை: மதுரையில் செப்.4-ம் தேதி நடைபெறுவதாக இருந்த மாநாடு தள்ளிவைக்கப்படுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது.
அதிமுகவை கைப்பற்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய சட்டப் போராட்டம் தொய்வடைந்து வரும் நிலையில், பாஜகவும் அவரை கைவிட்டது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததிலிருந்து, பன்னீர்செல்வத்தை கண்டுகொள்ளவில்லை என விரக்தியில் இருந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூலை 31-ம் தேதி சென்னையில் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உயர்மட்ட ஆலோசனைக்குப் பிறகு, பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்தார். அதற்கு முன்பாக முதல்வர் ஸ்டாலினை 3 முறை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். முன்னதாக, செப்.4-ம் தேதி மதுரையில் மாநாடு நடத்தப்படும் என்று பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.
இந்த மாநாடு தள்ளிவைக்கப்படுவதாக ஓபிஎஸ் தரப்பு நேற்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக பன்னீர்செல்வம் தரப்பினரிடம் கேட்டபோது, “தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளன. அரசியலில் எந்த நேரத்திலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம். வலிமையான கூட்டணி அமைந்த பிறகு மாநாட்டை, கூட்டணிக் கட்சிகளை அழைத்து நடத்திக்கொள்ளலாம் என்ற திட்டம் உள்ளது. அதனால் மாநாடு நடைபெறும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்றனர்.