சென்னை: அதிமுக சார்பில் வரும் செப்.15 முதல் 17-ம் தேதி வரை 3 நாட்ளுக்கு அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செப்.15 முதல் 17-ம் தேதி வரை 3 நாட்கள், அண்ணாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும்; கட்சி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 15-ம் தேதி தென் சென்னை, வடக்கு (மேற்கு) மாவட்டம் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நான் பங்கேற்று உரையாற்றுகிறேன். கட்சி எம்எல்ஏக்களும், கட்சியின் சார்பு அணிகளின் நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்துக்கான நிகழ்ச்சிகளை எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி உள்ளிட்ட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வேண்டும்.
கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும்அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 15-ம் தேதி அண்ணாவின் உருவச் சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.