சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், செப்.13 முதல் டிச.20-ம் தேதி வரை பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய், செப். 13-ம் தேதி முதல் கட்ட சுற்றுப்பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறார்.
இதற்கான அனுமதி கோரி திருச்சி காவல் ஆணையரிடம் கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் விஜய்யின் சுற்றுப்பயணத்துக்கு அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில், ஆனந்த் நேற்று மனு அளித்தார்.
அந்த மனுவில் இடம் பெற்றுள்ள சுற்றுப்பயண விவரம்: செப்.13-ம் தேதி முதல் டிச.20-ம் தேதி வரை தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். மொத்த சுற்றுப்பயணமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திட்டமிடப்பட்டுள்ளது. செப்.13-ம் தேதி திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை விஜய் தொடங்குகிறார்.
செப்.20-ம் தேதி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, அக். 4, 5 கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, அக்.11 கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, அக்.25 தென் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
மேலும், நவ.1 கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், நவ.8 திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நவ.15 தென்காசி, விருதுநகர், நவ.22 கடலூர், நவ.29 சிவகங்கை, ராமநாதபுரம், டிச.6 தஞ்சாவூர், புதுக்கோட்டை, டிச.13 சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களிலும் பயணத்தைத் தொடர்கிறார். டிச.20-ல் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் நிறைவு செய்கிறார்.
வழக்குப்பதிவுக்கு கண்டனம்: இதற்கிடையே, கடந்த 6-ம் தேதி தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், திருச்சி சென்றபோது அவரை வரவேற்க தொண்டர்கள் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.