சென்னை: சென்னை தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் சென்னை வெறும் ஊரல்ல, தமிழகத்தின் இதயத்துடிப்பு என தெரிவித்துள்ளனர்.
சென்னை நேற்று தனது 386-வது ஆண்டை கொண்டாடியது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்திகளில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: வளமான பாரம்பரியமும், துடிப்பான கலாச்சாரமும், நவீனமயமான புதுமைகளும், பசுமையான நீடித்த உறவுகளும் தடையின்றி சங்கமிக்கும் இடம் சென்னை. சென்னையின் பாரம்பரியத்தை கொண்டாடும் வேளையில், அதன் மாற்றத்தை உருவாக்கும் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையையும் நாம் ஆரத்தழுவி ஏற்றுக்கொள்வோம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழவழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்கு பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னை வெறும் ஊரல்ல. தமிழகத்தின் இதயத்துடிப்பு. வாழவைக்கும் சென்னைக்கு வணக்கம்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: சிறிய கிராமமாக தோன்றி தற்போது இந்திய நாட்டின் தலைசிறந்த மெட்ரோ நகரங்களில் ஒன்றாக விளங்குவதுடன், இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பை அளிக்கும் அட்சயபாத்திரராகவும் சென்னை திகழ்ந்து வருகிறது. அனைவருக்கும் சென்னை தின நல்வாழ்த்துக்கள்.
பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பது சென்னை. ஆனால் சென்னையை, வாழத்தகுதியற்ற மாநகராக மாற்றியது தான் இன்றைய ஆட்சியாளர்களின் சாதனை. கோடை வந்தால் வறட்சி, மழை வந்தால் வெள்ளம். இதுதான் இன்றைய சென்னையின் அடையாளம். சென்னையின் சாலைகளில் பயணம் செய்வதே சாகசமாக மாறியிருக்கிறது. இந்நிலையை மாற்றி சென்னையை வாழத்தகுந்த மாநகரமாக மாற்ற சென்னை நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தமிழகத்தின் தலைநகரம் எனப் பன்முக பெருமைகளோடு ஒட்டுமொத்த உலகையும் பிரமிக்க வைக்கும் நகரம் சென்னை. படிப்பிற்காகவோ, பணிக்காகவோ தன்னை நாடி வரும் அனைவரையும் அன்புடன் அரவணைக்கும் அன்னையாக, ஏராளமான இளைஞர்களின் வாழ்வியல் வழிகாட்டியாக, தொழில் முனைவோர்களின் தொடக்கப்புள்ளியாகத் திகழும் சென்னை உருவான நாளில் அதன் பெருமைகளையும், சிறப்புகளையும் போற்றிக் கொண்டாடுவோம்.