சென்னை: பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள சென்னை வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்கத்தேர்தலை, வரும் நவ.27-க்குள் நடத்தி முடிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, வழக்கறிஞர் வி.ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த 2018-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், “சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டுறவு சங்கம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கத்துக்கு கடந்த பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை என்பதால் சங்கமும் கேண்டீனும் தற்போது தனி அதிகாரியின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த கூட்டுறவு சங்கத்துக்கான தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும், எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், மெட்ராஸ் பார் அசோசியேஷன், லா அசோசியேஷன், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் அடங்கிய குழுவை அமைத்து வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, தேர்தல் அதிகாரி மூலமாக தேர்தலை நடத்த உத்தரவிட்டது.
இந்நிலையில், உயர் நீதிமன்றம் நியமித்த குழு வாக்காளர் பட்டியலை சரிபார்த்த பின்னரும் இந்த தேர்தல் இதுவரையிலும் நடத்தப்படவில்லை எனக்கூறி வழக்கறிஞர் வி.ஆனந்த் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரான ஜி. மோகனகிருஷ்ணனும் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கீதா தாமரை செல்வனும் வாதிட்டனர். அதையடுத்து நீதிபதி, தற்போது அந்த குழுவில் உள்ள வழக்கறிஞர்களான ஜி.மோகனகிருஷ்ணன், வி.ஆர். கமலநாதன், டி.வி.கிருஷ்ணகுமார், வி.நளினி ஆகியோர் வாக்காளர் பட்டியலை மீண்டும் தனி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். தனி அதிகாரி அந்த பட்டியலை வரும் அக்.25-க்குள் சரிபார்த்து தேர்தல் அதிகாரியிடம் வழங்க வேண்டும். அதன்படி தேர்தல் அதிகாரி வரும் நவ.27-ம் தேதிக்குள் இந்த சங்கத்துக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளார்.