சென்னை: வண்ணாரப்பேட்டையில் உள்ள ரயில்வே குடியிருப்பில் வசிப்போருக்கு மாற்று ஏற்பாடு செய்யாமல், அப்புறப்படுத்தும் ரயில்வேயின் முடிவுக்கு எஸ்ஆர்எம்யு கண்டனம் தெரிவித்துள்ளது.
வண்ணாரப்பேட்டையில் உள்ள ரயில்வே காலனியில் 64 குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளின் பாதுகாப்பு காரணம் காட்டி, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, மாற்று ஏற்பாடு செய்யாமல் அப்புறப்படுத்த சென்னை ரயில்வே கோட்டம் முடிவு செய்துள்ளது.
இதற்கு எஸ்ஆர்எம்யு எனப்படும் தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் கண்டனம் தெரிவித்து, இதன் பொதுச் செயலாளர் என். கண்ணையா வழிகாட்டுதலின்படி சென்னை கோட்ட செயலாளர் பால் மேக்ஸ்வெல் ஜான்சன் தலைமையில் இன்று கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில், எஸ்.ஆர்.எம்.யு.,வை சேர்ந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இது குறித்து எஸ்ஆர்எம்யு சென்னை கோட்ட செயலர் பால் மேக்ஸ்வெல் ஜான்சன் கூறியதாவது: “வண்ணாரப்பேட்டை ரயில்வே காலணியில் 64 குடியிருப்புகளில் இருப்போரை உடனடியாக காலி செய்ய உத்தரவிட்டுள்ள ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கிறோம். கட்டி முடித்து சில ஆண்டுகளே ஆன நிலையில், பாதுகாப்பற்ற கட்டிடங்கள் என கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது எடுத்த நடவடிக்கை என்ன?.
இங்குள்ள ரயில்வே ஊழியர்கள், குடும்பத்தினருக்கு மாற்று ஏற்பாடு செய்யாமல், அவசரமாக வீட்டை காலி செய்ய சொல்லுவதில் என்ன நியாயம் இருக்கிறது. எனவே, இங்குள்ள ரயில்வே ஊழியர்கள், குடும்பத்தினருக்கு, இதே பகுதியில் மாற்று குடியிருப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேணடும். இல்லாவிட்டால், நாங்கள் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்” இவ்வாறு அவர் கூறினார்.