சென்னை: சென்னை – ரேணிகுண்டா, சென்னை – அரக்கோணம் உள்ளிட்ட வழித்தடங்களில் 100 சதவீதம் தானியங்கி சிக்னல் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், சென்னை – ரேணிகுண்டா மார்க்கம் கவாச் தொழில்நுட்பத்துக்கு (மேம்பட்ட ரயில் பாதுகாப்பு அமைப்புகளுக்கு) மாறுவதற்கு எதிர்காலத்தில் தயாராக உள்ளது.
ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரயில் தண்டவாளங்களை வலிமைப்படுத்துவது, நவீன சிக்னல் முறை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய 4 முக்கிய நகரங்களை இணைக்கும் தங்க நாற்கர வழித்தடம் என்று அழைக்கப்படும் ரயில் தடங்களில் அமைக்கப்படுகிறது.
பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதி செய்யும் வகையில், மொத்தம் 1,612 கி.மீ. தொலைவு வழித்தடம் முழுவதும் தானியங்கி சிக்னலை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டன. தெற்கு ரயில்வேயில், சென்னை – ரேணிகுண்டா (134 கி.மீ) மற்றும் சென்னை – அரக்கோணம் (141 கி.மீ) உள்ளிட்ட வழித்தடங்கள் இதில் அடங்கும்.
இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் மொத்தம் 275 கி.மீ. தொலைவுக்கு தானியங்கி சிக்னல் அமைப்பு அமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்றது. இதன்மூலம் தங்க நாற்கர வழித்தடத்தில் தானியங்கி சிக்னல் முறை அமைக்கும் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்த முதல் மண்டலம் என்ற பெருமையை தெற்கு ரயில்வே பெற்றுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வேயில் சென்னை ரயில்வே கோட்டத்தில் புத்தூர் – புடி மார்க்கத்தில் கணினி மயமாக்கப்பட்ட நவீன சிக்னல் முறை (தானியங்கி சிக்னல் முறை) வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை முதல் திருப்பதி வரை ரயில்கள் தடையின்றி இயங்கும்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துடன் ரயில்வே இணைந்து இப்பணிகளை மேற்கொண்டது. இதன்மூலம், ரயில்களை வேகமாகவும் பாதுகாப்பாகவும் இயக்க முடியும். சென்னை – ரேணிகுண்டா வழித்தடம் கவாச் தொழில்நுட்பத்துக்கு மாற தயாராக உள்ளது. இதன்மூலம் ரயில்களின் தாமதம் குறையும். பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் இரண்டுக்கும் ஒட்டுமொத்த பாதுகாப்பு மேம்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.