சென்னை: சென்னை மின்சார ரயிலில் பெண் பயணி தவறவிட்ட ரூ.1.32 லட்சம் பணம், செல்போன் அடங்கிய பையை 15 நிமிடத்தில் வில்லிவாக்கம் ஆர்.பி.எஃப் போலீஸார் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்ட போலீஸாரை பயணிகள், உயரதிகாரிகள் பாராட்டினர்.
மயிலாப்பூரை சேர்ந்தவர் வர்கீஸ் ராஜம். இவர் இன்று (திங்கள்கிழமை) காலை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் வந்தார். அங்கிருந்து மின்சார ரயிலில் திருவள்ளூர் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, சில நிமிடத்தில் ஆவடி செல்லும் மின்சார ரயில் வந்தது. அதில் தவறுதலாக ஏறியுள்ளார். ரயில் புறப்பட்டபோது, இந்த ரயில் ஆவடி செல்கிறது என்பதை அறிந்து, அவர் விரைவாக இறங்கிவிட்டார்.
அப்போது, தனது ரூ.1.32 லட்சம் பணம், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், வங்கி புத்தகம் அடங்கிய பையை தவறவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, சென்னை மூர் மார்க்கெட் வளாகம் ஆர்.பி.எஃப் போலீஸாரிடம் தனது பையை தவறவிட்டதை கூறியுள்ளார். அவர்கள், உடனடியாக வில்லிவாக்கம் ஆர்.பி.எஃப் காவல் ஆய்வாளர் பர்சா பிரவீனுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனடியாக, வில்லிவாக்கம் புறநகர் ரயில் நிலையத்தில் கண்காணிப்புப் பணியில் இருந்த ஆர்.பி.எஃப் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனிடையே, 10.35 மணி அளவில் வில்லிவாக்கம் வந்த அந்த ரயிலில், ஏறிய ஆர்பிஎஃப் போலீஸார், அந்த பெண் பயணி அமர்ந்திருந்த இடத்தில் இருந்த பையை பத்திரமாக மீட்டனர்.
மேலும், அதில் இருந்த பயணியின் பணம், செல்போன், வங்கி புத்தகம் ஆகியவை இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொண்டனர். உடனடியாக, பை மீட்கப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பெண் பயணி வர்கீஸ் ராஜம், வில்லிவாக்கம் ஆர்.பி.எஃப் அலுவலகத்துக்கு சென்றார். அவரிடம் ரயிலில் இருந்து மீட்கப்பட்ட ரூ.1.32 லட்சம் பணம், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், வங்கி புத்தகம் அடங்கிய பையை ஆர்.பி.எஃப் போலீஸார் ஒப்படைத்தனர். அதனை பெற்றுகொண்ட வர்கீஸ் ராஜம் ஆர்.பி.எஃப் போலீஸாருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார்.
துரிதமாக செயல்பட்டு, பெண் பயணி தவறவிட்ட பண பையை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்த வில்லிவாக்கம் ஆர்.பி.எஃப் போலீஸாரை பயணிகள் மற்றும் ஆர்.பி.எஃப் உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.