சென்னை: மக்கள் பிரச்சினைக்காக போராடிய காங்கிரஸ் பிரமுகரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ள நிலையில், மாநகர காவல் ஆணையர் என்ன கடவுளா என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்கள் பகுதி மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி வரும் காங்கிரஸ் பிரமுகர் அப்ரோஸ், மாநகர காவல் ஆணையருக்கு கருப்புக்கொடி காட்டியதாக கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வேப்பேரியில் உள்ள அப்ரோஸின் இல்லத்துக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் கூறியதாவது: சென்னை மாநகர காவல்துறைக்கு சிந்திக்கும் திறன் இல்லை. தமிழக காங்கிரஸூக்கு எதிராக காவல்துறை கெடுதல் செய்திருக்கிறது. அப்ரோஸ் கருப்புக் கொடி காட்டி இருந்தாலும் தவறில்லை. நாட்டின் பிரதமருக்கு, குடியரசுத் தலைவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுகிறோம். அவர்களெல்லாம் சிரித்துக் கொண்டே கடந்து செல்கின்றனர்.
காவல்துறை ஆணையருக்கு கருப்புக் கொடி காட்டினால் அவ்வளவு பெரிய குற்றமா? ஜனநாயக நாட்டில் அதற்கு இடம் இல்லையா? தமிழகத்தில் ஜனநாயகம் இருக்கிறதா? தமிழக முதல்வர் அனைத்தையும் அனுசரித்து செல்கிறார். எல்லாவற்றையும் சரிவர செய்து வருகிறார்.
அவருடைய ஆட்சியில் காவல்துறை இப்படி செய்கிறார்கள் என்றால் இது எவ்வளவு பெரிய சர்வாதிகாரம். மாநகர காவல் ஆணையர் மனிதரா அல்லது கடவுளா? இல்லை, அதற்கும் மேலா? ஆணையர் வரும்போது கருப்புக் கொடி காட்டக் கூடாது என்று எந்த சட்டமும் இல்லை.
இதுகுறித்து எங்கள் தலைவர்களுடன் கலந்து பேசி முதல்வரை சந்திக்க இருக்கிறோம். மயிலாடுதுறை எம்.பி. சுதா டெல்லியில் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது, அவரிடம் நகையை பறித்த செயல், பாதுகாப்பு குறைபாட்டைதான் காட்டுகிறது என்றார். பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகியது குறித்த கேள்விக்கு “ஓபிஎஸ் நல்ல மனிதர்தான், ஆனால் உப்பை தின்றுவிட்டார், அவர் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்” என்றார்.