சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 6 மாதங்களில் 2 லட்சம் டன் கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் பிரிமீயர் பிரெசிசன் சர்ஃபேஸ் நிறுவனம் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன.
மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கட்டிடக் கழிவுகள் சீராக அகற்றப்படாமல் போக்குவரத்துக்கு இடையூறு, சுகாதார சீர்கேடு, விபத்துகள் ஏற்படுதல், வளர்ச்சிப் பணிகளில் தடங்கல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில் இப்பணிகளை மேற்கொள்வதில் உரிய தீர்வுகண்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் செம்மைப் படுத்தப்பட்டு, கடந்த ஜன.7-ம் தேதி 7 மண்டலங்களில் தீவிர கட்டிடக் கழிவுகள் அகற்றும் பணியை மேயர் ஆர்.பிரியா தொடங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து, ஜன.17-ம் தேதி இதர 8 மண்டலங்களிலும் தீவிர கட்டிடக் கழிவுகள் அகற்றும் பணி தொடங்கப்பட்டது. இப்பணிகளுக்காக 15 மண்டலங்களிலும் 168 வாகனங்களைப் பயன்படுத்தி சராசரியாக நாளொன்றுக்கு 1000 டன் கட்டிடக் கழிவுகள் அகற்றப்படுகின்றன.
கடந்த ஜன.7 முதல் ஜூலை 22-ம் தேதி வரையிலான 6 மாதங்களில் 2 லட்சம் டன் கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. அவை கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள கட்டிடக் கழிவுகள் பிரித்தெடுக்கும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தனித்தனியாக பிரித்து மறுசுழற்சி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கட்டிடக் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக பொதுமக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த ஏப்.21-ம் தேதி முதல் மாநகராட்சி பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அலுவலர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாதவர்களிடமிருந்து ஜனவரி முதல் ஜூலை 22-ம் தேதி வரை ரூ.39.30 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.