சென்னை: சென்னையில் தூய்மைப் பணி தனியாரிடம் வழங்கப்படுவதை கண்டித்து, மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில், மாநகராட்சி தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்ற மனிதச் சங்கிலி போராட்டம் 68 இடங்களில் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன. இதில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர் மண்டலங்களில் சில வார்டுகள், அம்பத்தூர் மண்டலத்தில் சில வார்டுகள் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் தூய்மைப் பணியை தனியாரிடம் மாநகராட்சி வழங்கியுள்ளது.
மீதமுள்ள 5 மண்டலங்களில் 1000-க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்கூறிய 5 மண்டலப் பகுதிகளிலும் தூய்மைப் பணிகளை தனியாரிடம் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனால் ஏற்கெனவே பணி செய்து வருவோருக்கு பணி வாய்ப்பு கிடைக்காது. இத்தனை ஆண்டுகளாக மாநகராட்சி தூய்மைப் பணி மேற்கொண்ட தங்களுக்கு பணி நிரந்தர வாய்ப்பு பறிபோகும். தனியார் பணியை மேற்கொண்டால், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு குழி தோண்டி புதைக்கப்படும்.
தூய்மைப் பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியப் பலன்கள் கிடைக்காது எனக்கூறி, மாநகராட்சி தூய்மைப் பணியை தனியாரிடம் வழங்குவதை கண்டித்து மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில், 68 இடங்களில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த இருப்பதாக மாநகராட்சி செங்கொடி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.