சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை 1.38 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, திருவெற்றியூரில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 1,500 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: சென்னையில் பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் இருக்கும் மக்களுக்கு பட்டா கொடுக்கப்படும் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது முதல்வர் வாக்குறுதி கொடுத்தார். அதற்காக வருவாய்த் துறை அமைச்சர் தலைமையில் ஒரு குழுவையும் நியமித்தார். அந்தக் குழு பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தி பட்டா கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது.
அதன் அடிப்படையில், கடந்த ஜூலை மாதம் மாதவரத்தில் 2,200 பேருக்கு பட்டாக்களை வழங்கினோம். அடுத்து சோழிங்கநல்லூர் தொகுதியில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு பட்டா கொடுத்தோம். திருவொற்றியூர் தொகுதியிலும் கடந்த செப்டம்பர் மாதம் 2,120 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினோம். சென்னையில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பட்டாக்களை வழங்கி இருக்கிறோம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இதுவரை 1,38 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக இன்றைக்கு 1,500 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, வடசென்னை அனல்மின் நிலையத்துக்கு இடம் கொடுத்த 400 பேருக்கு மாற்று இடம் வழங்கப்பட்டதற்கான பட்டா பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது. அதை கேள்விப்பட்ட முதல்வர், உடனே அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி 35 வருடங்களுக்கு பிறகு அந்த 400 பேருக்கும் தற்போது பட்டா வழங்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை 1970, 1980-களில் வழங்கப்பட்ட இந்த வீட்டுமனைகளுக்கு பல இடங்களில் பட்டா இல்லை. நிறைய தொழில்நுட்ப காரணங்கள் இருந்தன. அதை எல்லாம் சரிசெய்து, இந்த பட்டாவை வழங்கி இருக்கிறோம். இந்த பகுதி மக்களுக்காக, விரைவில் இன்னும் 18 ஆயிரம் பட்டாக்களை வழங்கவுள்ளோம் என்று துணை முதல்வர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்.பி. கலாநிதி வீராசாமி, எம்எல்ஏ-க்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், ப.தாயகம் கவி, ஆர்.டி.சேகர், நா.எழிலன், ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, ஜே.ஜே.எபினேசர், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, கே.பி.சங்கர், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு.மகேஷ் குமார், வருவாய்த் துறை செயலர் பெ.அமுதா. சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், நில நிர்வாக ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் ப.மதுசூதன் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் சு.கீதா, நிலைக் குழுத் தலைவர் (நகரமைப்பு) தா.இளைய அருணா, மாமன்ற உறுப்பினர்கள், பயனாளிகள், அரசு உயர் அலுவலர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.