சென்னை: சென்னை, புறநகர் மாவட்டங்களில் நேற்று அதிகாலை விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, புறநகர் மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த ஆக. 30-ம் தேதி நள்ளிரவில் பெய்த அதிகனமழையால், 27 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
அதிகபட்சமாக வட சென்னையில் மணலியில் 27 செமீ, மணலி புதுநகரில் 26 செமீ, விம்கோ நகரில் 23 செமீ மழை பதிவாகியுள்ளது. இந்த அதிகனமழை மேகவெடிப்பால் நிகழ்ந்ததாக வானிலை ஆய்வு மையம் முதன் முறையாக அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த செப்.14-ம் தேதி அதிகாலை விடிய விடிய பலத்த இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக சென்னை பாரிமுனையில் 11 செமீ, கொளத்தூர், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தலா 9 செமீ, பொன்னேரியில் 8 செமீ மழை பதிவானது.
இதன் தொடர்ச்சியாக நேற்று அதிகாலையில் சென்னை, புறநகர் மாவட்டங்களில் பரவலாக மிக கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த முறை தென் சென்னையில் மழை அதிகமாக பதிவாகியுள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தென் சென்னை பகுதிகளான ஒக்கியம் துரைப்பாக்கம், சைதாப்பேட்டையில் தலா 12 செமீ, கண்ணகி நகரில் 11 செமீ, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 9 செமீ, சென்னை பள்ளிக்கரணை, மேடவாக்கம், மணலி, டிஜிபி அலுவலகம், மணலி புதுநகரில் தலா 8 செமீ மழை பதிவாகியுள்ளது.
கனமழை காரணமாக சென்னை மாநகரில் பல்வேறு சாலைகளில் அதிகாலை நேரத்தில் மழைநீர் தேங்கியதால், சாலைகளில் பாதை குறுகி, வாகனங்கள் ஊர்ந்தவாறு சென்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேற்று அதிகாலை தோகாவிலிருந்து சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. துபாய், லண்டன், சார்ஜா விமானங்கள் வானில் வட்டமடித்து, தாமதமாக தரையிறக்கப்பட்டன. சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய சில விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.