சென்னை: சென்னை, புறநகரில் 2-வது நாளாக இன்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
சென்னை, புறநகரில் பகல் நேரத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் பகுதிகளில் தொடர்ந்து 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் கடும் வெயில் பதிவாகி வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதிகபட்சமாக சென்னை சென்ட்ரலில் 7 செமீ, கொரட்டூர், விம்கோ நகரில் தலா 6 செமீ, சோழிங்கநல்லூர், ஐஸ் ஹவுஸ், புறநகர் பகுதியான படூர் உள்ளிட்ட பகுதிகளில் தலா 5 செமீ, பாரிமுனை, மேடவாக்கம் ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழை பதிவாகி இருந்தது.
இந்நிலையில் சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே வெயில் அதிகமாக இருந்தது. வேலை நிமித்தமாக வெளியில் வந்தவர்கள், வெயில் தாங்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாயினர். இதனிடையே, வெப்பத்தை தணிக்கும் வகையில் இன்று மாலை சுமார் 6.15 மணி அளவில் சென்னை, புறநகர் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து, திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.
சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, அடையாறு, எழும்பூர், பெரம்பூர், எண்ணூர், மணலி, கொடுங்கையூர், மாதவரம், புரசைவாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, கோயம்பேடு, அண்ணாநகர், போரூர், கிண்டி, ஆலந்தூர், புறநகர் பகுதிகளான தாம்பரம், ஐயப்பந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து குளிர்வித்தது.
மாலை நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்ப பேருந்து நிலையங்களில் காத்திருந்த பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர். சில சாலைகளில் மழை நீர் தேங்கியதால், வாகனங்கள் ஊர்ந்தபடி சென்ற நிலையில், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மாலை நேரத்தில் மெரினா கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள் மழையில் ஒதுங்க இடமின்றி சிரமத்துக்குள்ளாகினர்.