சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘நான் முதல்வன்’ திட்ட பயிற்சி முகாமில் பல்லி விழுந்த பயறு வழங்கியதாக பேராசிரியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த 6 நாள் பயிற்சி முகாம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 112 பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு பயிற்சி இடைவேளையின்போது தேநீர் மற்றும் ஸ்னாக்ஸ் வழங்கப்படும். அந்த வகையில் நேற்று முன்தினம் (புதன்) தேநீரும் பெரும்பயறும் வழங்கப்பட்டுக் கொண்டிருந்ததது. அப்போது பல்கலைக்கழக ஊழியர் ஒருவர், பெரும்பயறு இருந்த பாத்திரத்தில் பல்லி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மருத்துவ கண்காணிப்பு: இதற்கிடையே, 30-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பெரும்பயறை சாப்பிட்டு முடித்துவிட்டனர். பல்லி இறந்து கிடந்த தகவல் தெரிய வந்ததும் பேராசிரியர்கள் அனைவரும் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து திடீர் போராட்டத்தில் இறங்கினர். இதற்கிடையே, பெரும்பயறை சாப்பிட்ட பேராசிரியர்கள் தங்களுக்கு ஏதாவது உடல்நிலை பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில், உடனடியாக தங்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறினர்.
இதைத்தொடர்ந்து, 22 பேராசிரியைகள் உள்பட 37 பேர் அருகே உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுகிறதா என் கண்காணித்தனர். ஒரு மணி நேரம் ஆகியும் எவ்வித பாதிப்பும் கண்டறியப்படாததால் அனைத்து பேராசிரியர்களும் உடனடியாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் பல்கலை. வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.