சென்னை: சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணு மின்நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் முகாம்களின் மீது இந்திய ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்கி அழித்தது. இதை தொடர்ந்து மத்திய அரசின் அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் சென்னை துறைமுகம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது.
சென்னை துறைமுகம் தலைமை அலுவலக வளாகத்தில் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஒரு மணி நேரம் உள்நாட்டு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. ஒரே நேரத்தில் திடீரென விமான தாக்குதல் நடப்பதை உருவாக்கி, துறைமுகத்தில் இருந்து பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக வெளியேறுவது, மீட்பது குறித்து ஒத்திகை நடந்தன.

சென்னை துறைமுக ஆணையம், இந்தியக் கடற்படை, இந்தியக் கடலோரக் காவல்படை, இந்திய விமானப்படை, தமிழக போலீஸ், தேசிய பேரிடர் மீட்புப் படை, எண்ணெய் கையகப்படுத்தும் அமைப்புகள், சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் துறைமுக பணியாளர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
ஒத்திகை நிறைவில், சென்னை துறைமுகத்தின் தலைவர் சுனில் பாலிவால் தலைமையில் விளக்கம் கூட்டம் நடந்தது. இதில், துணைத்தலைவர் விஸ்வநாதன், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் சகாதே மற்றும் காவல் துணை ஆணையர் சுந்தரவடிவேல் பங்கேற்றனர்.

மீட்பது குறித்து ஒத்திகையில் ஈடுபட்ட வீரர்கள்.படம்: ம.பிரபு
இதேபோல் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் நேற்று ஒத்திகை நடைபெற்றது. இதில், அணுமின் நிலையங்களை ஏதேனும் தாக்குதல்கள் மூலம் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில், ஊழியர்கள் மற்றும் சுற்றுப்புற மக்களை மீட்டு, முதலுதவிகள் அளித்து பாதுகாப்பது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர்கள் மற்றும் கமாண்டோ பாதுகாப்பு படையினர் ஒத்திகை நடத்திக் காட்டினர்.