சென்னை: வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதை அடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் அவர் பேசிய தாவது: கடந்த சில ஆண்டுகளாகவே பருவமழைக் காலங்களில் சென்னை அதிகமான மழையை எதிர்கொண்டு வருகிறது. இதில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஓட்டேரி நல்லா கால்வாய், வீரங்கல் ஓடை மற்றும் விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, அந்த கால்வாய்களின் நீர்வழிப்பாதைகள் ரூ.95 கோடியில் மேம்படுத்தப்பட்டு வரு கின்றன. அதேபோல் செங்குன்றம் அருகேயுள்ள சாலைகளில் மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் மூலம் ரூ.23.12 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னையின் 18 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்குவதைத் தவிர்க்க ரூ.15 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொருக்குப்பேட்டை போஜராஜன் நகர் பகுதியில் ரூ.30.13 கோடி மதிப்பீட்டில் வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்றுள் ளது. வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே ரூ.2.50 கோடியில் ரயில் பாதையின் குறுக்கே கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
நீர்வளத்துறை சார்பில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் ரூ.338 கோடியில் 12 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி எண்ணூர் முகத்துவாரத்தில் ரூ.28 கோடியில் தூர்வாரும் பணிகள், பக்கிங்ஹாம் கால்வாயில் ரூ.60 கோடியில் சீரமைப்பு பணிகள் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.
அதைத்தொடர்ந்து தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஒக்கியம் மடுவிலிருந்து நீரை விரைவாகவும், நேரடியாகவும் கடலுக்கு கொண்டு செல்ல ரூ.91 கோடியில் பணிகள் தொடங்க உள்ளன. இந்த பணிகளை எல்லாம் மழைக்காலத்துக்குள் முடிக்க வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.