சென்னை எல்லையையும் செய்யாறு சிப்காட்டையும் இணைக்கும் வகையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் வழியாக 6 வழிச் சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு விவசாயிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன், தாம் எதிர்த்த எட்டு வழிச் சாலையை மாற்று பெயரில் திமுக அரசு செயல்படுத்த முயல்வதாக குற்றம் சாட்டினர்.
செய்யாறு சிப்காட்டையும், சென்னையையும் இணைக்கும் வகையில் 6 வழிச் சாலை அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு உள்ளது. இந்த சாலை செங்கல்பட்டு மாவட்டம் ஆப்பூர் சேந்தமங்கலத்தில் தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாத்தனஞ்சேரி, சீத்தனஞ்சேரி, பழவேரி, சிறுதாமூர், அருங்குன்றம் ஆகிய பல்வேறு கிராமங்கள் வழியாக செய்யாறு சிப்காட் பகுதிக்கு செல்கிறது.
சுமார் 60 கி.மீ தூரம் செல்லும் இந்த சாலைக்கான நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. இதில் பல்வேறு விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகள் என பொதுமக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு விவசாயிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு நிலங்கள் யார் பெயரில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகள் பலர் இது தொடர்பாக ஆய்வுக் கூட்டத்தின்போது தங்கள் நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என்று காஞ்சிபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்களை அளித்துள்ளனர்.

எட்டுவழிச் சாலையை மாற்றுப் பெயரில் அமல்படுத்தும் முயற்சியா? இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் அருங்குன்றம் தேவராஜன் கூறுகையில், இந்த சாலை அமைக்கப்பட்டால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நாங்கள் எங்கள் நிலத்தை கொடுக்க மாட்டோம் என்று கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இந்த சாலையானது ஏற்க்குறைய எட்டுவழிச் சாலை செல்லும் சாலை வழியாகத்தான் செல்கிறது.
சிறு, சிறு மாறுதல்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது. எட்டுவழிச் சாலையை துண்டாக்க முயற்சிப்பதுபோல் தெரிகிறது. இது தொடர்பான எந்த தெளிவான விவரங்களையும் அதிகாரிகள் தெரிவிக்க மறுக்கின்றனர். செய்யாறு சிப்காட்டுக்கு ஏற்கெனவே இருக்கும் சாலைகளை விரிவுபடுத்தலாம். எதற்காக புதிய சாலை அமைக்க வேண்டும்.
நிலம் கையகப்படுத்தக் கூடாது என்ற எங்கள் மனுவை பரிசீலிக்க வேண்டும் என்றார். இது குறித்து கோட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் அரசுக்கு அனுப்பப் பட்டுள்ளன. இது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.