சென்னை: சென்னை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த 2024 ஜூன் வரை நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகள் எத்தனை? எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகளில் புலன் விசாரணை நிலுவையில் உள்ளது? என்ற விவரங்கள் குறித்து ஜூலை 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு செய்ததாக புகார் அளித்த குடியிருப்பு உரிமையாளரான நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை என்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவரை, அவமானப்படுத்தும் வகையில், குடியிருப்பு உரிமையாளர் ஒருவர் வாட்ஸ் அப் குரூப்பில் சாதி ரீதியிலான கருத்துக்களை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அளித்த புகார் மீது நொளம்பூர் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வானமாமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புகார் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இந்த வழக்கு இன்று (ஜூன் 9), நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் நேரில் ஆஜரானார். அப்போது, காவல் துறை தரப்பில், வானமாமலையிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை. புகார் வந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
பின்னர் சென்னை மாநகர காவல் ஆணையர் அருணை அழைத்த நீதிபதி, காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த எண்ணிக்கைக்கும் நீதிமன்றத்தில் உள்ள அறிக்கையின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் உள்ளது. புகார்கள் மீது விசாரணை நடத்தி அவற்றை முடித்து வைத்தால் அது குறித்து நீதிமன்றங்களுக்கு அறிக்கைகள் அனுப்பப்படுவதில்லை.
சென்னை நகரில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த 2024 ஜூன் வரை நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகள் எத்தனை? எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகளில் புலன் விசாரணை நிலுவையில் உள்ளன என்ற விவரங்கள் குறித்து ஜூலை 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
குற்றப்பத்திரிகைகள் கோப்புக்கு எடுக்கும் விஷயத்தில் கீழமை நீதிமன்றங்கள் ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் அதை தனது கவனத்துக்கு கொண்டு வரும்படி அறிவுறுத்திய நீதிபதி, போக்குவரத்து நெரிசலில் காத்திருக்க நாம் விரும்புவதில்லை. வீட்டில் மின்சாரம் இல்லாவிட்டால் காத்திருப்பதில்லை ஆனால் வழக்குகளுக்கு மட்டும் மக்கள் 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது என்று குறிப்பிட்டார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும் மக்களுக்கு எதுவும் சென்றடைவதில்லை. சட்டத்தின் ஆட்சி இல்லை. ஏராளமான குறைபாடுகள் உள்ளன என்று தெரிவித்த நீதிபதி, புலன்விசாரணை அதிகாரிகளை பாதுகாப்பு பணிகளுக்கு அனுப்பக் கூடாது என்று காவல் ஆணையருக்கு அறிவுறுத்தினார்.