சென்னை: தமிழக பாஜக மாநில தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை தி.நகரில் பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது.
இந்த அலுவலகத்தில் 24 மணி நேரமும் போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று காலை ஒரு செய்தி வந்தது. அதில், கமலாலயத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, போலீஸார் 5-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் கமலாலயத்துக்கு வந்தனர். மாநில அலுவலக செயலாளர் சந்திரன் முன்னிலையில், கமலாலயம் முழுவதும் சோதனை செய்தனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்து மாம்பலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மீண்டும் நேற்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு காவல் ஆணையர் தலைமையில், அனைத்து நீதிமன்ற அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. இந்த மிரட்டலும் வதந்தி என தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவனிடம் விசாரணை: இதனிடையே, சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சில நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து கோயம்பேடு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த 17 வயது சிறுவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை பிடித்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.