எழும்பூர் ரயில் நிலையத்தில் இரண்டாம் வகுப்பு காத்திருப்போர் அறையில் கழிப்பறைகள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளதால், இங்கு இயற்கை உபாதைக்காக வரும் பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் 11 நடைமேடைகள் உள்ளன.
இங்கிருந்து தினசரி 30-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுபோல, சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு இடையே தினசரி 150-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையம் வழியாகவே இயக்கப்படுகின்றன. தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் இங்கிருந்து தான் புறப்படுகின்றன.
அதுபோல, தென்மாவட்டங்களில் இருந்து இந்த ரயில்கள் புறப்பட்டு, சென்னை எழும்பூருக்கு வந்தடைகின்றன. இந்த ரயில் நிலையத்துக்கு தினசரி 75,000 முதல் 1.25 லட்சம் பேர் வரை வந்து செல்கின்றனர். இதனால், இந்த ரயில் நிலையம் அதிகாலை முதல் நள்ளிரவு வரை பரபரப்பாக இருக்கும்.
தற்போது, இந்த ரயில் நிலையத்தை உலக தரத்தில் மேம்படுத்தும் விதமாக, ரூ.735 கோடி மதிப்பில் மறுசீரமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணியின் ஒரு பகுதியாக, 1-வது முதல் 11-வது நடைமேடை வரை இணைக்கும் வகையில், ஒரு பிரம்மாண்ட நடைமேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெறுகிறது. இதனால், பயணிகளுக்கு சில இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன.
அதன்ஒருபகுதியாக, ரயில் நிலையத்தில் 2-ம் வகுப்பு காத்திருப்போர் அறையில் உள்ள கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் வசதிக்காக, கட்டண குளிரூட்டப்பட்ட காத்திருபோர் அறை, 2-ம் வகுப்பு காத்திருப்போர் அறை உள்ளது.
இவற்றில் 2-ம் வகுப்பு காத்திருப்போர் அறை கட்டணமின்றி பயன்படுத்திக்கொள்ளலாம். இது, 2-ம் வகுப்பு பொது பெட்டி, 2-ம் வகுப்பு முன்பதிவு பெட்டியில் பயணிக்கும் சாதாரண, நடுத்தர பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும். அதாவது, விரைவு ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள், மற்றொரு இடத்தில் இருந்து ரயிலில் இந்த நிலையம் வந்து கழிப்பறையை பயன்படுத்திவிட்டு, வேறு ஒரு ரயில் நிலையத்துக்கு செல்ல வரும் பயணிகள் ஆகியோருக்கு பேருதவியாக இருக்கும்.

இந்நிலையில், மறுசீரமைப்பு பணியை காரணம் காட்டி, 2-ம் வகுப்பு காத்திருப்போர் அறையில் உள்ள கழிப்பறைகள் கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதை அறியாமல், இயற்கை உபாதை கழிக்கவும், குளிக்கவும் அவசரமாக 2-ம் வகுப்பு காத்திருப்போர் அறைக்கு வரும் பயணிகள், கழிப்பறைகள் மூடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.
இதையடுத்து, அருகில் உள்ள பயணிகளிடம் விசாரித்து, கட்டண கழிப்பறை அல்லது அருகில் உள்ள கட்டண ஏசி வசதி கொண்ட காத்திருப்போர் அறைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.இது குறித்து, ரயில் பயணி ராமு கூறியதாவது: எனது சொந்த ஊர் கடலூர். நான் வேலை நிமித்தமாக எழும்பூர் வரும்போது, இந்த காத்திருப்போர் அறையில் உள்ள கழிப்பறையை பயன்படுத்தி வந்தேன். இந்நிலையத்தில் தற்போது 2-ம் வகுப்பு காத்திருப்போர் அறை இருக்கிறது.
ஆனால், இங்குள்ள கழிப்பறைகள் மூடியே தான் இருக்கின்றன. எனவே, இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள மொபைல் கழிப்பறை அல்லது கட்டண கழிப்பறையை நாடிச்செல்ல வேண்டியுள்ளது. என்னைப் போல, நிறைய பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பெண் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, 2-ம் வகுப்பு காத்திருப்போர் அறையில் உள்ள கழிப்பறைகளை விரைவில் திறக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, மறுசீரமைப்பு பணியின் ஒருபகுதியாக, 4-வது நடைமேடையில் அடித்தளம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த கழிப்பறைகளை பயன்படுத்தும்போது, அதிலிருந்து கழிவுநீர், 4-வது நடை மேடையில் அடித்தளம் அமைக்கும் இடத்துக்கு வந்து விடுகிறது. இதனால், பணிகள் பாதிக்கின்றன.
எனவே தான் இந்த கழிப்பறைகளை மூடி உள்ளோம். பயணிகள் வசதிக்காக, அதன் அருகே இரண்டு மொபைல் கழிப்பறைகளை வெளியே வைத்து உள்ளோம். பயணிகள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ரயில் நிலையத்தின் மறுசீரமைப்புபணிகள் முடியும் வரை சில அசவுகரியம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இதற்கு உரிய மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுத்து வருகிறோம். சில ஆண்டுகளில் எல்லாம் சரியாகிவிடும்.” என்றார்.