சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ஆவின் பால் விற்பனை 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். ஆவின் முகவர்களுக்கு உரைக்கலன் வழங்குதல் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ஆணைகளை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ஆவின் பால் விற்பனை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.25 கோடிக்கு விற்பனையானது. இந்த ஆண்டு சுமார் ரூ.33 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இதன்மூலம், கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த பால் உற்பத்தியை பெருக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரூ.55 லட்சத்தில் சீரமைப்பு பணி: சென்னையில், மொத்தம் 23 பாலகங்கள் உள்ளன. இவற்றில், 12 பாலகங்கள் ரூ.55 லட்சம் செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. விற்பனையாளர்களை ஊக்கப்படுத்த, ஃப்ரீசர் பெட்டிகள் ஆவின் பாலகங்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் எஞ்சிய பகுதிகளில் உள்ள பாலகங்களில் பணியாளர்களை அதிகப்படுத்தி விற்பனையைக் கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஆவின் பாலகங்களில் விநியோக சங்கிலியை அதிகப்படுத்தும் பணி நடைபெறுகிறது. ஆவின் பாலகங்களில் 200-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. ஆனால், அனைத்து ஆவின் பாலகங்களிலும் அனைத்து பால் பொருட்களும் கிடைப்பதில்லை. இந்த நிலை சரிசெய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.