சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர்களது கல்லறைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பழைய சட்டக் கல்லூரி செயல்பட்ட இடத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக இருந்த எலிஹூ யேல் என்பவரின் மகன் டேவிட் யேல் அவருடைய நண்பர் ஜோசப் ஹிம்னெர்ஸ் ஆகியோரின் கல்லறைகள் உள்ளன.
இந்த இடத்தில் 5 மாடிகள் கொண்ட பன்னடுக்கு கட்டிடமும், வாகன நிறுத்தமும் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், கட்டுமான பணிகளுக்கு இடையூறாக உள்ள இந்த கல்லறைகளை அகற்றி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும், எனக்கோரி வழக்கறிஞர் பி. மனோகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, ‘ ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் நினைவு சின்னங்களாக அறிவிக்கப்பட்ட இந்த கல்லறைகளை சுதந்திரத்திற்கு பிறகும் தொடர வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இந்த 2 கல்லறைகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்பதால் இந்த கல்லறைகளை 4 வாரங்களில் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும், என மத்திய தொல்லியல் துறைக்கு கடந்த 2023-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து மத்திய தொல்லியல் துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேபோல மூத்த வழக்கறிஞரான டி.மோகனும் கல்லறைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தும், உயர் நீதிமன்ற கட்டுமானப் பணிகளுக்கு உரிய மாஸ்டர் பிளானை உருவாக்கி, நகர ஊரமைப்பு துறையின் விதிமுறைகளுக்குட்பட்டு கட்டுமானங்களை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும், எனவும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் எம்.சுந்தர், என். சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மத்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த 1684 – 1688 காலகட்டத்தி்ல் கட்டப்பட்ட இந்த 2 கல்லறைகளும் 1921-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.
தொல்லியல் மற்றும் நினைவுச் சின்னங்கள் சட்டத்தின்படி இந்தியாவில் உள்ள பழமையான நினைவுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதால், இரு கல்லறைகளையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும், என வாதிடப்பட்டது. ஆனால் அதற்கு ஏற்கெனவே வழக்கு தொடர்ந்த மனுதாரரான பி.மனோகரன் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், பாரம்பரியமான, கலாச்சார நயமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் உள்கட்டமைப்பு, மேம்பாட்டு பணிகளை அதன் கலைநயம் மாறாமல் வடிவமைக்க வேண்டிய பொறுப்பும், பணியும் உயர் நீதிமன்ற கலாச்சார கமிட்டிக்கு உள்ளது. எனவே உயர் நீதிமன்றத்தின் அத்தியாவசிய தேவையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியமானது.
பழைய சட்டக்கல்லூரியும் வரலாற்று சிறப்புமிக்க கலாச்சார கட்டுமானமாக இருப்பதால் அதன் புணரமைப்பு மற்றும் அதன் அருகில் பன்னடுக்கு கட்டுமானம் ஆகியவற்றுக்கு இடையூறாக உள்ள இந்த 2 கல்லறைகளையும் வேறு இடத்துக்கு மாற்றியமைக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை நாங்களும் ஏற்கிறோம்.
ஆகவே அந்த கல்லறைகளை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட இந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்கிறோம். அதேநேரம் உயர் நீதிமன்ற கட்டுமானப்பணிகளுக்கு மாஸ்டர் பிளானை உருவாக்கி, விதிமுறைகளுக்குட்பட்டு கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள வேண்டும், என உத்தரவிட்டுள்ளனர்.