சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பதவி எற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஸ்ரீராம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமை ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடம் மாற்றவும், அங்கு உள்ள தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவாவை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த மே மாதம் 26-ம் தேதி குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர் இருவரின் பணியிட மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
இதனையடுத்து மத்திய சட்ட அமைச்சகம் ஜூலை 14-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்வு சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 4 மணிக்கு நடந்தது. இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தவாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி ஏற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.
நீதிபதி எம்.எம்.ஶ்ரீவஸ்தவா, கடந்த 1964-ம் ஆண்டு மார்ச் மாதம் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் பிறந்தார். 2009-ம் ஆண்டு சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் 2021-ம் ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு கடந்த ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பணி ஒய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.