சென்னை: சென்னை அரசு மனநல மருத்துவமனையில் ரூ.42 கோடியில் கட்டப்பட்டுள்ள மனநலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மையத்தை முதல்வர் விரைவில் திறந்து வைக்கவுள்ளார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அரசு மனநல மருத்துவமனையில் ரூ.40.5 கோடியில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டினர்.
தொடர்ந்து, ரூ.42 கோடியில் கட்டப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ள மனநலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மையம் கட்டுமான பணியினை ஆய்வு செய்தனர். மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொ) தேரணிராஜன், அரசு மனநல மருத்துவமனை இயக்குநர் மாலையப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: இந்த மருத்துவமனையில் இடைநிலை பராமரிப்புமையம், காந்த சக்தி மூலம் மூளையைத் தூண்டும் நவீன சிகிச்சை ஆகியவற்றை முதல்வர் ஏற்கெனவே தொடங்கி வைத்துள்ளார்.
ரூ.42 கோடி செலவில் மனநலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மையம் கட்டுவதற்கு முதல்வர் அடிக்கல் நாட்டியிருந்தார். கட்டிடப் பணிகள் முடிவடைந்த நிலையில் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மைய கட்டிடத்தை முதல்வர் விரைவில் திறந்து வைக்கவுள்ளார்.
இந்த மருத்துவமனையில் ஏற்கெனவே ரூ.4.62 கோடியில் பாரம்பரிய கட்டிடமாகக் கருதப்பட்ட மனமகிழ் மன்ற கட்டிடம் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் முதன்முறையாக மனநோயாளர்களுக்கு காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 850-க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் பயன்பாட்டில் உள்ளது.
மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சியாக 100 தீவிர சிகிச்சை பிரிவுக்கான மருத்துவக் கட்டிடம், 220 மற்ற சாதாரண படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடம் என்று 330 படுக்கை வசதிகள் கொண்ட 3 பிளாக்குகள் கட்டும் பணி தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் முடிவுற்ற பிறகு இந்த மருத்துவமனையில் மட்டும் 570 படுக்கை வசதிகளோடு புதிய கட்டிடத்திலேயே மருத்துவ பயனாளர்கள் பயன் பெறுவார்கள். ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் தொடங்கப்பட்ட ஒரே நாளில் 38 மாவட்டங்களில் 44,418 பேர் பயன்பெற்று இருக்கிறார்கள். வரும் சனிக்கிழமை 37 மாவட்டங்களில் நடத்தப்பட உள்ளது.
388 வட்டாரங்களுக்கு தலா 3 என்ற வகையிலும், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட 5 மாநகராட்சிகளில் தலா 4 என்ற வகையிலும், 10 லட்சத்துக்கும் குறைவான 19 மாநகராட்சிகளில் தலா 3 என்ற வகையிலும் 1,256 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வாரத்துக்கு 38 முகாம்கள் என 6 மாதங்களுக்குள் நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.