சென்னை: சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.261.83 கோடியிலான மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ.33.57 லட்சத்தில் வாய் முக தாடை சிறப்பு ஊடுகதிர் படக்கருவி, ரூ.3.39 லட்சத்தில் ஒளித்தூண்டக் கூடிய பாஸ்பர் தகடு ஸ்கேன், ரூ.11 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, ரூ.14.62 லட்சத்தில் இணையவழி நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம், ரூ.62.60 லட்சத்தில் உட்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களை பயன்பாட்டுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கொண்டு வந்தார். இந்நிகழ்வில், சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொ) தேரணிராஜன், தமிழ்நாடு அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் .பிரேம்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தின் பழம்பெரும் பல் மருத்துவக் கல்லூரி, பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்று 100 இளங்கலை பல் மருத்துவ மாணவர்கள் படிக்கும் வகையிலும், 40 முதுகலை பல் மருத்துவ இடங்களுடன் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. தினமும் 1,500 பேர் புறநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் பயன்பெற்று வருகின்றனர்.
ரூ.261.83 கோடியில் பல்வேறு வகைகளிலான புதிய மருத்துவக் கட்டமைப்புகள் இந்த வளாகத்தில் கட்டப்பட்டு வருகின்றன. அவை செப்டம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். சுகாதாரத் துறையில் ஒரு மருத்துவர் பணியிடம் கூட காலி இல்லாத அளவுக்கு அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 48 பல் மருத்துவர்கள், 450 தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு முதல்வர் பணி ஆணைகளை வழங்கவுள்ளார். பல் மருத்துவர்களை பணியிடமாற்றம் செய்வது தவறு இல்லை. இங்கு ஒருவர் மருத்துவராக வருகிறார் என்றால் அவர் ஓய்வு பெறும் வரை இங்கு பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. பணியிட மாறுதலுக்காக வெளிப்படை தன்மையுடன் கலந்தாய்வு நடைபெறுகிறது.
கடந்தகால அதிமுக ஆட்சியில் எந்த திட்டம் தொடங்கினாலும் அம்மா அம்மா என்றே பெயர் வைத்தனர். லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தால் திமுகவுக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு கூடியிருப்பதால், காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுகவினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.