ஆவடி: சென்னை, அம்பத்தூர் பகுதியில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் வாகனங்கள் விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, அம்பத்தூரில் இருந்து கொரட்டூருக்கு, வெங்கடாபுரம், மேனாம்பேடு, கருக்கு வழியாக செல்லும் சாலை, கருக்கு பிரதானச் சாலை. மாநகராட்சி சாலையான, இச்சாலையை அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர், வில்லிவாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாக செல்ல பயன்படுத்தி வருகின்றனர்.
ஆகவே, காலை, மாலை வேளைகளில் பரபரப்பாக காணப்படும் இச்சாலையில், இன்று மதியம் கருக்கு, அம்மா உணவகம் அருகில் சாலையின் மையப்பகுதியில் திடீர் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. அப்பள்ளத்தில் அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனம் விழுந்தது; தொடர்ந்து பின்னால் வந்த லாரி ஒன்றின் முன்சக்கரமும் பள்ளத்தில் சிக்கியது.
இதைப் பார்த்த பொதுமக்கள், இரு சக்கர வாகனத்துடன் பள்ளத்தில் விழுந்த இளைஞரை மீட்டனர். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த மாநகராட்சி உறுப்பினர் ரமேஷ், உதவி பொறியாளர் வெங்கடேசன், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய உதவி பொறியாளர் பிரவீன் மற்றும் போலீஸார், சாலையில் தடுப்பு அமைத்து போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையில் அங்கிருந்து சென்றனர். பிறகு அதிகாரிகள் சாலையில் உள்ள பள்ளத்தை ஆய்வு செய்த போது, சாலை 20 அடி ஆழம், 10 அடி அகலத்துக்கு உள்வாங்கியதும், சாலையின் அடியில் உள்ள கழிவுநீர் குழாயில் இருந்து கழிவுநீர் உள்ளுக்குள்ளே ஆறாக ஓடியதும் தெரியவந்தது.
பிறகு, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய அதிகாரிகள், மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டல அதிகாரிகள் ஆகியோர் இணைந்து பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையை தோண்டி சீரமைக்கும் பணியை தொடங்கினர். இந்த சாலையை முழுமையாக சீரமைக்க 2 நாட்களுக்கு மேலாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கருக்கு பிரதான சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.