சென்னை: சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீஸார் கைது செய்தனர். சென்னையில் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் துாய்மைப் பணியை, தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி ஒப்படைத்துள்ளதை கண்டித்தும், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், துாய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு கடந்த ஆக.1-ம் தேதிமுதல் தொடர்ந்து 13 நாட்கள் போராட்டம் நடத்தினர்.
நீதிமன்ற உத்தரவால், நள்ளிரவில் இவர்கள் கைது செய்து, குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து செப். 4-ம் தேதி சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில், திடீரென திரண்ட 300-க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்களை மீண்டும் குண்டுக்கட்டாக போலீஸ் கைது செய்தது. இந்த திடீர் போராட்டத்தை அடுத்து துாய்மைப் பணியாளர்களின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகரில், துாய்மைப் பணியாளர்கள் 13 பேர் நேற்று முன்தினம் பணி நிரந்தரம் கோரி தங்கள் வீட்டருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக 200-க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்களும் திரண்டனர். இத்தகவல் அறிந்து வந்த போலீஸார் அவர்களை உடனடியாக கைது செய்து அப்புறப்படுத்தியது.
அவர்கள் நள்ளிரவு 1 மணியளவில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பின்புறம் (மாநகராட்சிக்கு அருகே) 2-வது நாளாக அதே 13 தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அங்கு வந்த போலீஸார் தூய்மைப் பணியாளர்களை தொடர்ந்து போராட விடாமல் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இது தொடர்பாக செய்தி யாளர்களிடம் தூய்மை பணியாளர்கள் கூறுகையில், “அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியாவுடன் சேர்ந்து முதல்வருக்கு நன்றி தெரிவித்தவர்கள் தூய்மைப் பணியாளர்கள் அல்ல. அவர்கள் கட்சிக்காரர்கள்.
அதனால் தான் பதாகையை மறைத்து வைத்துக் கொண்டே பேசினர். நாங்கள் 2 மாதமாக வேலையில்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம். வீட்டு வாடகை கூட கொடுக்க முடியவில்லை. முதல்வர் எங்களை சந்தித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்” என்று தெரிவித்தனர்.