சென்னை: சென்னையில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் செப்.16-ல் முக்கிய ஆலோசனை நடக்கவுள்ளதாக அறிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ், தினகரன் வெளியேறிய நிலையில், அவர்களை மீண்டும் கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சித்து வருகிறது.
அதேபோல், ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என செங்கோட்டையன் போர்கொடி தூக்கியிருப்பது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓரிரு நாட்களுக்கு முன்பு அமித் ஷாவை சந்தித்த செங்கோட்டையன் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, கூட்டணியில் உள்ள பிரச்சினைகள் குறித்து நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை அழைத்து தேசிய தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தல், கூட்டணி விவகாரம் குறித்து சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.
அதன்படி ‘சிந்தன் பைதக்’ எனப்படும் ‘சிந்தனை ஆய்வுக் கூட்டம்’ செப்.16-ம் தேதி நடக்கிறது. இதற்கு பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமை தாங்குகிறார். இதில், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, எல்.முருகன், வானதி, தமிழிசை, ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.