சென்னை: தலைநகர் சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் மேற்கொண்ட தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து புதன்கிழமை இரவு இந்த கைது நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டனர்.
சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 பகுதிகளுக்கான தூய்மைப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இரண்டு மண்டல தூய்மைப் பணியாளர்களில் என்யூஎல்எம் பிரிவைச் சேர்ந்தவர்கள் கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் மேற்கொண்டனர். தூய்மைப் பணியாளர்களுடன் அரசு தரப்பு மேற்கொண்ட பல சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறித்து போராடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை அடுத்து போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை கலைந்து செல்லுமாறு காவல் துறை புதன்கிழமை மாலை அறிவுறுத்தியது.
இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டத்தை அங்கு தொடர்ந்தனர். சுதந்திர தினம் நெருங்குகின்ற சூழலில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் தங்களது கையில் தேசிய கொடியை ஏந்தி இருந்தனர். இந்த சூழலில் நீதிமன்ற உத்தரவின் பேரில் புதன்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
கைது நடவடிக்கைக்கு ஆளான தூய்மை பணியாளர்கள் அரசு பேருந்து மூலம் அழைத்து செல்லப்பட்டனர். போராட்ட களத்தில் இருந்து விலகி செல்ல மறுத்தவர்களை குண்டுக்கட்டாக போலீஸார் தூக்கி சென்றனர். பெண் தூய்மை பணியாளர்களை பெண் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரிப்பன் மாளிகை பகுதி முழுவதும் போலீஸார் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த கைது நடவடிக்கையின் போது அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.