அரியலூர்: காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் சென்னையில் இன்னும் சில தினங்களில் பேட்டரி பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
அரியலூர் அண்ணாசிலை அருகே விரிவாக்கப்பட்ட மினி பேருந்து சேவையை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரியலூர் மாவட்டத்தில் 2 புதிய வழித்தடத்திலும், 29 நீட்டிக்கப்பட்ட வழித்தடத்திலும் 31 மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில், சென்னை மாநகரில் இன்னும் 10 நாட்களில் பேட்டரி பேருந்துகள் சேவை தொடங்கப்பட உள்ளது. காலநிலை மாறிவரும் காரணத்தால் பொதுமக்களுக்கான பேருந்து சேவையில் தடை ஏதும் ஏற்படாமல் இருக்கும் வகையில், சென்னையிலும் விரைவில் மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, எம்எல்ஏக்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன், வட்டார ப்போக்குவரத்து அலுவலர் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.