சென்னையில் இருந்து குறுகிய தூரத்துக்கு இயக்கப்படும் மெமு பாசஞ்சர் ரயில்களில் ஒன்பது பெட்டிகளை இணைத்து இயக்குவதால், பயணிகள் நெரிசலில் சிக்கி, கடும் அவதிப்படுகின்றனர். எனவே, இந்த ரயில்களில் 12 பெட்டிகளாக அதிகரித்து இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு தினமும் 630-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் வசதிக்காக, இந்த ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. ஆனால், காட்பாடி – அரக்கோணம், சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர், திருத்தணி – சென்னை சென்ட்ரல், சென்னை – திருப்பதி, நெல்லுார் உட்பட 20-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் ‘மெமு’ வகை ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இவை அனைத்தும், 8 அல்லது 9 பெட்டிகளாக மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும். இவை குறுகிய தூர பயணிகள் ரயில்களாக இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் காலை, மாலை நெரிசல் மிகுந்த “பீக் அவர்ஸ்” நேரங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால், பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, இந்த ரயில்களை 12 பெட்டிகள் கொண்ட ரயில்களாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, திருநின்றவூர் ரயில் பயணிகள் பொது நலச்சங்க தலைவர் முருகையன் மற்றும் திருவள்ளூர் ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: சென்னை அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து தினசரி வந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இதனால், ‘மெமு’ வகை ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. பீக் அவர்ஸ் நேரங்களில் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். தற்போது, அனைத்து மின்சார ரயில்களையும் 12 பெட்டிகளாக இயக்குவது வரவேற்கத்தக்கது.
இதுபோல, குறுகிய தூரம் செல்லும் ‘மெமு’ வகை ரயில்களையும் 12 பெட்டிகளாக இயக்கினால், பயணிகள் நெரிசலின்றி செல்ல முடியும். கூடுதலான பயணிகளும் பயணிக்கலாம். இது தொடர்பாக, ரயில்வே அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.