சென்னை: சென்னை மாநகரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் 4,000 மது பாட்டில்கள் உணவு பாதுகாப்பு துறை, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டன.
சென்னையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களின் பயன்பாட்டை தடுக்கும் வகையில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை, சென்னை மாநகர காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில் அவ்வப்போது சோதனை மேற்கொள்ளப்பட்டு, கள ஆய்வுகள் மூலம் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப், குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களையும், மதுபாட்டில்களையும் அழிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.
அதனடிப்படையில், சென்னையில் சேகரிக்கப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், சென்னை பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் உணவு பாதுகாப்பு துறை சென்னை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் மற்றும் காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் வழிமுறைகளை பின்பற்றி நேற்று (செப் 20) அழிக்கப்பட்டது.
இதேபோல், நீதிமன்ற உத்தரவுப்படி சம்பந்தப்பட்ட காவல்துறையினர் முன்னிலையில் ரூ.5.25 லட்சம் மதிப்பிலான 4,000 மதிபாட்டில்களும் முறையாக அழிக்கப்பட்டன.