சென்னை மாநகராட்சி சார்பில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள ரூ.30.52 கோடி செலவில், 477 நீர் இறைக்கும் டிராக்டர்களை வாடகைக்கு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகரம் நாளுக்கு நாள் கான்கிரீட் மயமாகி வருகிறது. மாநகராட்சியின் திட்டங்களும் கான்கிரீட் சாலை, கான்கிரீட் மழைநீர் வடிகால், கான்கிரீட் நடை பாதை என செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மழை காலங்களில் மழைநீர் நிலத்தில் ஊருவது தடுக்கப்பட்டு, நீர் தேங்கும் பகுதிகள் அதிகரித்து வருகின்றன. தற்போது மெட்ரோ ரயில் பணிகள், நெடுஞ்சாலைத் துறை, சென்னை குடிநீர் வாரியம், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை சாலைகளை தோண்டி தடுப்புகள் ஏற்படுத்துவதால், வழக்கமாக நீர் வழிந்தோடுவது பாதிக்கப்பட்டு, மழைநீர் தேக்கம் ஏற்படுகிறது.
இந்நிலையில், சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அதிக மழை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இதை எதிர்கொள்ள, மாநகராட்சி நிர்வாகம் தயாராகி வருகிறது. இதன்படி, மாநகராட்சி சார்பில் மழைநீர் தேங்கும் பகுதிகளாக ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப டிராக்டர் மூலம் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக மண்டல வாரியாக டெண்டரும் கோரப்பட்டுள்ளது.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எளிதில் எடுத்துச் செல்ல ஏதுவாக டிராக்டர் மூலம் நீர் இறைக்கும் இயந்திரங்கள் முந்தைய ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்டது. இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதனால், இந்த ஆண்டும் பருவ மழையை எதிர்கொள்ள 477 நீர் இறைக்கும் டிராக்டர்கள் வாடகைக்கு எடுக்கப்பட உள்ளன. இவை வரும் செப்.15 முதல் ஜன.14-ம் தேதி வரை 4 மாத பயன்பாட்டுக்கு தயார் நிலையில் இருக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஒவ்வொரு டிராக்டருக்கும், டீசல் செலவு நீங்கலாக மாதம் ரூ.1.60 லட்சம் அதிகபட்ச வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மொத்தம் ரூ.30.52 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. மண்டல வாரியாக குறைந்த ஒப்பந்தப் புள்ளி கோரும் ஒப்பந்ததாரர்களுக்கு பணி வழங்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.