சென்னை: ஹுண்டாய் மோட்டார் நிறுவனம், சென்னை ஐஐடியுடன் இணைந்து, சென்னையில் ரூ.180 கோடியில் அமைக்கப்பட உள்ள பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையத்தின் மாதிரி வடிவமைப்பை, தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டார்.
தமிழக அரசின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024, சென்னையில் கடந்தாண்டு ஜனவரியில் நடத்தப்பட்டது. அதில், சென்னை ஐஐடி வழிகாட்டுதலின்படி ஹூண்டாய் மோட்டார்ஸ் மற்றும் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மையம் இணைந்து, அதிநவீன பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையத்தை தொடங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதை செயல்படுத்தும் விதமாக, தையூரில் உள்ள சென்னை ஐஐடியின் டிஸ்கவரி செயற்கைக்கோள் வளாகத்தில் 65 ஆயிரம் சதுரடி பரப்பில் ரூ.180 கோடியில் பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அறிமுக விழா தையூரில் நேற்று நடைபெற்றது.
இதில், தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று மையத்தின் வடிவமைப்பை வெளியிட்டு பேசும்போது, “பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் உள்நாட்டு ஹைட்ரஜன் உற்பத்தியை நோக்கிய முக்கியமான முன்னெடுப்பாகும்.
நமக்கு தேவையான எரிசக்திகளை நாமே உருவாக்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கம். நமது கண்டுபிடிப்புகளை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும். ஹைட்ரஜன் எரிசக்தியையும் அத்தகைய ஒன்றாக பார்க்கிறேன். தமிழகத்தின் வளர்ச்சிக்கான பணிகளை மாநில அரசு முன்னெடுக்கும்”என்றார்.
சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி பேசுகையில், “குப்பைகளில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருளை தயாரிக்க முடியும். விவசாய கழிவுப் பொருட்களும் ஹைட்ரஜன் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் நாங்கள் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் ஹூண்டாய் காரில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை சென்று திரும்ப உள்ளோம்.
இது குறைந்த விலையாகவும் இருக்கும். ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிக்கும் போது மாசுப்படுதலும் குறைக்கப்படும். இதனால், 2070-ம் ஆண்டுக்குள் நாட்டின் கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாக்கும் முயற்சிகளுக்கு ஊக்கமாக அமையும்”என்று தெரிவித்தார். இந்நிகழ்வில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குநர் உன்சூ கிம், ஹூண்டாய் நிறுவனத்தின் தலைமை உற்பத்தி அதிகாரி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.