சென்னை: “சென்னையில் உள்ள 36 ‘சமூக நீதி விடுதிகள்’ எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி நோய் பரப்பும் கூடாரங்களாகி, வாழத் தகுதியற்ற வசிப்பிடங்களாக உருமாறி வருவது அதிர்ச்சியளிக்கிறது” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கான 36 அரசு ‘சமூக நீதி விடுதிகள்’ எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி நோய் பரப்பும் கூடாரங்களாகி, வாழத் தகுதியற்ற வசிப்பிடங்களாக உருமாறி வருவது அதிர்ச்சியளிக்கிறது.
புழு விழுந்த உணவும், துர்நாற்றம் வீசும் நீரும், பராமரிப்பில்லாத கழிவறைகளும், சிதிலமடைந்த கட்டிடங்களும் உள்ள அரசு விடுதிகளை வைத்துக் கொண்டு ஏழை, எளிய மாணவர்களின் சமூக நீதியை நிலை நாட்டப் போவதாக திமுக அரசு பெயர்மாற்றம் செய்தது, மக்கள் வரிப் பணத்தைக் கையாடல் செய்ததை மறைக்கத்தானோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காரணம், 23 அரசு விடுதிகளில் நூலகம் அமைப்பதற்காக ரூ.21 லட்சம் செலவழிக்கப்பட்டுள்ளதாக திமுக அரசு மார்த்தட்டி வரும் வேளையில், பல நூலகங்களில் புத்தகங்களோ, முறையான இணைய வசதியோ இல்லை. மாலையில் மாணவர்களுக்கு வழங்கவேண்டிய சிற்றுண்டி வழங்கப் படாததோடு, மாணவர்களின் சுகாதார மேம்பாட்டிற்காக வழங்கப்படும் ரூ.150 கூட அவர்களின் கைகளில் சென்று சேரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதை விட போதிய பணியாளர்களை பணியமர்த்தாததால், விடுதிக் கழிவறைகளை மாணவர்களே கழுவும் கொடுமையும் அரங்கேறி வருகிறது. மாநிலத்தின் தலைநகரில் உள்ள விடுதிகளே கவலைக்கிடமாக உள்ள நிலையில், தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் அரசு விடுதிகளின் நிலை என்னவாக இருக்கும்?
மாணவர்களின் நலனை விடுத்து, விளம்பரத்தை தூக்கிப்பிடித்து, அநீதி இழைக்கும் இந்த போலி சமூகநீதி மாடல் அரசை மக்கள் விரைவில் விரட்டியடிப்பர் என்பது நிச்சயம்” என்று அவர் கூறியுள்ளார்.