சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை சுற்றி நாளை காலை 6 முதல் 10 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன் விவரம்: காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை முதல் ராஜாஜி சாலையில் உள்ள ஆர்பிஐ சுரங்கப்பாதை வரையிலான சாலைகள் மற்றும் கொடி மரச்சாலையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்படும்.
காமராஜர் சாலையில் ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கிச் செல்ல விரும்பும் வாகனங்கள் வாலாஜா சாலையில் இடதுபுறம் திரும்பி அண்ணா சாலையில் இணைந்து, மன்றோ சிலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் என்.எஃப்.எஸ். சாலை வழியாக பாரிமுனையை அடையலாம்.
ராஜாஜி சாலையிலிருந்து தலைமைச் செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள், பாரிமுனை, என்.எஃப்.எஸ். சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், முத்து சாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை, மன்றோ சிலை வழியாக அண்ணா சிலையில் இடது புறம் திரும்பி வாலாஜா சாலை நோக்கிசென்று காமராஜர் சாலையை அடையலாம்.
இவ்வாறு போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இறுதிக் கட்ட ஒத்திகை தலைமைச் செயலகம் எதிரே நேற்று காலை நடைபெற்றது. இதில் காவல் துறை உட்பட பல்வேறு துறை மற்றும் படைகளைச் சேர்ந்த வீரர்கள் சீருடையுடன் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். முதல்வர் தேசியக் கொடியை ஏற்றுவது போலவும், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வது போலவும் ஒத்திகை நடத்தப்பட்டது.