சென்னை: சென்னை மாநகரில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 20 ஆயிரம் பேரை நாய்கள் கடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவலால் அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், நாய்க்கடி சம்பவங்களை தடுக்க திட்டம் வகுத்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளனர்.
சென்னையில் வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் ராட்வீலர் நாய்களும், தெருநாய்களும் சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்களை கடித்துக் குதறிய சம்பவங்களையடுத்து, நாய்களை கட்டுப்படுத்தக் கோரி கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான ஆர்.எஸ். தமிழ்வேந்தன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், ‘தெருக்களில் வாய்மூடி அணிவிக்காமல் அழைத்துச் செல்லப்படும் ராட்வீலர் போன்ற வளர்ப்பு நாய்களையும், ஆக்ரோஷமாக சுற்றித்திரியும் தெருநாய்களையும் பிடித்து பொதுமக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சியின் முதன்மை கால்நடைத் துறை அதிகாரியான ஜெ.கமால் ஹூசைன் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், ‘சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வீடுகளில் நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் அதற்கான உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் இதற்கான உரிமம் பெறுவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது. இந்த நாய்களால் பொது சுகாதாரத்துக்கு ஏற்படும் தீங்குகள், மலம் கழித்தல், கடித்தல் போன்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் சம்பந்தப்பட்ட உரிமையாளரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆக.9-ம் தேதி முதல் வெறிநாய் தடுப்பூசி போடுவதற்கான மெகா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 200 வார்டுகளிலும் 60 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. விசாரணையின்போது, ‘‘சென்னையில் எத்தனை நாய் கடி சம்பவங்கள் நடந்துள்ளன’’ என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கால்நடைத்துறை அதிகாரி, ‘‘உத்தேசமாக கடந்த ஆண்டு மட்டும் 20 ஆயிரம் நாய் கடி சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கும்’’ என்றார்.
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்து தடுப்பூசி போட்டு மீண்டும் அதே பகுதியில் விடுவதற்கு பதிலாக அவற்றை தனியாக காப்பகம் அமைத்து பராமரிக்கலாம் என கருத்து தெரிவித்தனர். பின்னர் தெருநாய் விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும் விசாரித்து வருவதால், நாய் கடி சம்பவங்களைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.