சென்னை: சென்னை ரிப்பன் மாளிகை முன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்புறப்படுத்தும் நடவடிக்கை என்பது காவல்துறையினர் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை வெளியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அவர்களை அங்கிருந்து காலி செய்யும்படி காவல்துறையினர் அனுப்பிய நோட்டீசை அமல்படுத்தக் கோரி சென்னையைச் சேர்ந்த தேன்மொழி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியவில்லை என்றும் வாதிடப்பட்டது.
தமிழக அரசு தரப்பில், போராட்டத்தை கைவிட்டு, காலி செய்யக் கூறி உத்தரவு பிறப்பித்தும், தொடர்ந்து போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகிறார்கள். முறையான அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களாக கலைந்து செல்லும்படி அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
தூய்மை பணியாளர்கள் தரப்பில், போராட்டம் நடத்த தங்களுக்கு உரிமை உள்ளதாகவும், இன்னும் இரண்டு ஒரு நாட்களில் இந்த பிரச்சனைக்கு சமுக தீர்வு காணப்படும் என அமைச்சர் கூறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு போக்குவரத்துக்கோ எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அனுமதி இன்றி நடைபாதையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்த முடியாது என்பதால் அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.
அப்புறப்படுத்தும் நடவடிக்கை என்பது காவல்துறையினர் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், அரசுக்கு முறையாக விண்ணப்பித்து, அனுமதி பெற்று ஒதுக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்தலாம் எனவும் அறிவுறுத்தினர்.