சென்னை: சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் நவராத்திரி விற்பனை கண்காட்சி இன்று (செப்.12) முதல் வரும் அக்.5-ம் தேதி வரை நடைபெறுகிது. கண்காட்சியை ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி இன்று காலை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நவராத்திரியை முன்னிட்டு, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி மதி விற்பனை கண்காட்சி, சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தொடங்கியது. இந்த கண்காட்சியை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தொடங்கி வைத்து, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “மகளிர் சுய உதவிக் குழுக்களை ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்களது தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்யும் வகையில் 24 நாட்கள் கொண்ட கண்காட்சியை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கண்காட்சி அக்.5-ம் தேதி வரை நடைபெறும். தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் கண்காட்சியை இலவசமாக பார்வையிட்டு தங்களுக்கு தேவையான மகளிர் சுய உதவிக் குழுக்களின் தரமான பொருட்களை வாங்கிச் செல்லலாம்.
இந்த கண்காட்சியில் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள சுய உதவிக் குழுக்கள் தயாரித்த, அந்தந்த மாவட்டத்தின் சிறப்பு மிக்க பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அந்தவகையில் சென்னையில் கிடைக்காத, தாங்கள் விரும்பும் பல்வேறு மாவட்ட பொருட்களை ஒருசேர ஒரே இடத்தில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் பெரு நிறுவனங்களில் பலருக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்றாலும், அதற்கான கிஃப்ட் பாக்ஸ்களும் இங்கு கிடைக்கும். அதேபோல் பெரியளவிலான ஆர்டர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
கண்காட்சியில் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளான நவராத்திரி கொலு பொம்மைகள், குத்து விளக்குகள், பட்டு, பருத்தி ஆடைகள், செயற்கை ஆபரணங்கள், கைவினை பொருட்கள், சணல், காகிதம், பனை ஓலை மற்றும் வாழை நார் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், தோல் பொருட்கள், மரச் சிற்பங்கள், மூலிகை பொருட்கள் உள்ளிட்டவை 46 அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இத்துடன் அறுசுவை மிகுந்த பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்வதற்கென 5 அரங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.வி.ஷஜீவனா, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை இயக்கு அலுவலர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.