சென்னை: சென்னை மாநகரில் தெரு நாய்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்குதல், மைக்ரோசிப் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒருங்கிணைந்த மேலாண்மை இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்குள் செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
செல்லப் பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த கடந்த 2023-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் முதல் மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப்பிராணி உரிமம் பெறுவது நடைமுறையில் உள்ளது.
செல்லப் பிராணிகளின் உரிமையாளர் தங்களின் புகைப்படம், முகவரிச் சான்று, செல்லப்பிராணி புகைப்படம் மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து ரூ.50 உரிமக் கட்டணமாகச் செலுத்தி உரிமம் பெற்று வருகின்றனர். கடந்த 2024-ம் ஆண்டுமுதல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 12,393 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாட்டிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சியில் நாய்களுக்கு மைக்ரோசிப் செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேலாண்மை இணையதள சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா நேற்று தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநகராட்சிப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று செல்லப் பிராணிகள் குறித்த கணக்கெடுப்பும், உரிமம் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் பணி வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்கப்படும். நாய்களை முறையாகப் பிடித்து விடுவிப்பதை உறுதி செய்வதற்காக, க்யூஆர் குறியீடு காலர்கள் மற்றும் மைக்ரோ சிப் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 12,250 தெருநாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை 72,345 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. நாய்கள் தொடர்பாக 1913 என்கிற எண்ணிலும், 9445061913 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார்களைத் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ. குமரகுருபரன், இணை ஆணையர் வீ.ப.ஜெயசீலன், நிலைக்குழுத் தலைவர் (சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, கால்நடை மருத்துவ அலுவலர் ஜெ.கமால் உசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.