சென்னையில் அண்மைக் காலமாக தெரு நாய்கள் தொல்லையும், நாய் கடிப்பதால் பரவும் ரேபிஸ் நோயால் பாதிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு ராயப்பேட்டையை சேர்ந்த ஒருவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதுபோன்ற நாய்கள் தொல்லை தொடர்பாக மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: நாய் கடித்தால் காலில் கடும் வலி ஏற்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சியிடம் புகார் தெரிவித்தால், காலதாமதமாக வந்து, நாயை பிடித்துச் சென்று, கருத்தடை செய்து, ஒரு வாரத்துக்கு பிறகு, அதே இடத்தில் விட்டுவிட்டு, எங்கள் புகார் மீது தீர்வு கண்டுவிட்டதாக புகாரை முடித்துவிடுகின்றனர். அந்த நாய் தெருவில் செல்வோரை மீண்டும் விரட்டி சென்று அச்சுறுத்துகிறது.
தற்போதுள்ள சட்டங்கள் நாய்களுக்கு பாதுகாப்பை வழங்குகின்றன. மனிதர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பெரும்பாலான பகுதிகளில் உள்ள நாய்கள் கடிக்காவிட்டாலும் குறைப்பது, விரட்டி அச்சுறுத்துவது அதிகமாக உள்ளது.
இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு உயிரினத்தின் இனப்பெருக்கத்தையும் கட்டுப்படுத்த ஒரு உயிரினம் படைக்கப்பட்டிருக்கிறது. மருத்துவம் மற்றும் சுகாதாரத்தில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்கள்தொகை பெருக்கமடைந்தது போல, மக்களோடு வாழ பழகிய தெரு நாய்களும் பெருகிவிட்டன.
மக்களோடு வசிப்பதால், மற்ற விலங்குகளை போல, நாய்களுக்கு இயற்கை எதிரி இல்லாமல் போனதாலும், சட்ட பாதுகாப்பும் இருப்பதால் நாய்களின் பெருக்கம் அதிகமாகிவிட்டன. இதை கட்டுப்படுத்துவதில், சென்னை மாநகராட்சி மெத்தனமாக உள்ளது. தெரு நாய்களின் அச்சுறுத்தலுக்கும், மாநகராட்சியின் கருத்தடை அறுவை சிகிச்சைக்கும் தொடர்பில்லாமல் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) வீ.ப.ஜெயசீலனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
மாநகராட்சி பகுதியில் அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 1.80 லட்சம் தெருநாய்கள் உள்ளன. கரானோ காலத்தில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால், தெருநாய்களின் இயற்கையான இறப்பு 50 சதவீதம் குறைந்துவிட்டது. ஆர்வலர்கள் பலரும் அப்போது தெரு நாய்களுக்கு அதிக அளவில் உணவளித்தனர். அவற்றின் இனப்பெருக்கத்துக்கு சாதகமான சூழல்கள் அப்போது அமைந்தன.
கரோனா காலத்தில் மாநகராட்சி சார்பில், ஓராண்டுக்கு மேலாக இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யவில்லை. தற்போது சாலையோர அசைவஉணவகங்கள் அதிகரித்துவிட்டன. சிக்கன் பகோடா கடைகளும் அதிக அளவில் உள்ளன. இவற்றால் உருவாகும் கழிவுகள் தெருநாய்களுக்கு அதிக ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இருப்பதால், மனிதர்களை போல அவற்றின் ஆயுளும் கூடிவிட்டன.
தற்போதுள்ள சட்ட விதிகளின்படி, நாய் தொல்லை, பெருக்கத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி வசம் உள்ள ஒரே ஆயுதம், இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மட்டும் தான். தற்போது மாநகராட்சி சார்பில் புளியந்தோப்பு, மீனம்பாக்கம், லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை, சோழிங்கநல்லூர் ஆகிய 5 இடங்களில் உள்ள மையங்களில் தெரு நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு 115 நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு செய்யப்படுகிறது.
சென்னையில் 1.80 லட்சம் நாய்கள் உள்ள நிலையில், ஒரே ஆண்டில் 70 சதவீத நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும். அப்படியெனில், தினமும் சுமார் 400 நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு செய்ய வேண்டும். அதற்காக மேலும் 10 இடங்களில் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையங்களை மாநகராட்சி அமைத்து வருகிறது. ஏற்கெனவே உள்ள மையங்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்களை பராமரிக்க தலா 140 கூண்டுகள் உள்ளன.
10 புதிய மையங்களில் மேலும் தலா 100 கூண்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் டிசம்பருக்குள் முடிந்துவிடும். 2026 ஜனவரியில் நாளொன்றுக்கு 400 நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யும் இலக்கை எட்டுவோம். அதன் பிறகு நாய்களின் பெருக்கமும், தொல்லையும் படிப்படியாக குறையும்.
கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பின்படி, ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள், ரேபிஸ் நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நாய்கள், ஆக்ரோஷமான நாய்களை பிரத்யேகமான காப்பகத்தில் வைத்து உரிய சிகிச்சை அளிக்க, புறநகர் பகுதியில் 500 நாய்களை வைத்து பராமரிக்கக்கூடிய பிரத்யேக இடம் தேர்வு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெருநாய்களுக்கு உணவு அளிப்பதற்காக பிரத்யேக இடத்தை அடையாளம் காணும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.